இலங்கையில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை: சீனத்தூவர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’ நடவடிக்கைகளைத் தமது நாடு வன்மையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு, 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தீவுகளில் திட்டமிடப்பட்ட மின்சாரத் திட்டம் நிறுத்தப்பட்டதால் சுமார் பத்தாயிரம் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகிலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை உள்ளடக்கிய ‘கலப்பு மின் உற்பத்தி’ திட்டத்தை முன்னெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை சீனாவின் ‘சினோசார்-எடெக்வின்’ நிறுவனம் வென்றிருந்தது.
இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம், இந்தியாவின் தென் மாநிலமான தமிழகக் கடற்கரையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என புதுடெல்லி கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
இதன் விளைவாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் மூலோபாயப் பிரசன்னத்தைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கம் அந்தச் சீன ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. இறுதியில், 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதே திட்டத்தை இந்தியா தனது 11 மில்லியன் அமெரிக்க  டொலர் முழுமையான ‘மானிய’ நிதியுதவியுடன் பொறுப்பேற்று, தற்போது அதன் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதையே சீனத் தூதுவர் ‘வெளி அழுத்தம்’ மற்றும் ‘முதலீட்டுத் தடை’ என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

நன்றி பிபிசி தமிழ்