இவ்வருடம் மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் இல்லை : ரில்வின் சில்வா யாழில் அறிவிப்பு

இந்த வருடம் மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அதற்காக வரவு செலவு திட்டதில் ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்தத்துக்கு செலவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 23ம் திகதி மக்கள் தொடர்பு அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடந்த வரவுசெலவுத் திட்டங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம்.
ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த போது நாட்டில் பாரிய வெள்ள அனர்த்தம் அதனுடனையே இணைந்து பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியான சூழல்கள் உருவாகின” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அதனால், வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்போதே, இந்த நெருக்கடி நிலைக்காக மாத்திரம் 500 பில்லியன் ரூபாயை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது”.

“அந்தப் பணம் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணமாகும். இதன் காரணமாக, இந்த வருடத்தில் எங்களால் தேர்தலை நடத்த முடியாமல் போனதுடன், தற்போது புதிய சில சட்டப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன” என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.