பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு எதிர்ப்புக்கு மத்தியில் பிணை!

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்த எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதான நீதவானினால் சந்தேகநபரான 71 வயதுடைய பௌத்த தேரர், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் சந்தேகநபரான தேரர் இழைத்துள்ள குற்றத்தின் தன்மை, அதற்குரிய சட்ட விதிமுறைகள் மற்றும் அதன் காரணமாக பிணை வழங்குவது தொடர் விசாரணைகளுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்த நிலையிலேயே தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான தேரருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து அதிர்ச்சியுடன் கருத்துரைத்த பாதிக்கப்பட்ட சிறுமிக்காக முன்னிலையான சட்டத்தரணி, இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 18 பக்க அறிக்கையின் தொடக்கத்திலேயே, இடம்பெற்றுள்ள குற்றம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி, சந்தேகநபரான தேரரைக் குறுகிய காலத்திற்குள் கைது செய்வதையும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதையும் பொலிஸார் தவிர்த்துள்ளனர் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸார் அநாவசியமான முறையில் விசாரணை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தியுள்ளனர் என்பதும் அதில் காட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர் செல்வாக்கு மிக்கவர் பிணை வழங்க வேண்டாம் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இத்தகையதொரு பின்னணியில் இந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஏனைய சாட்சிகளும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எமது அதிகாரசபை அவதானிக்கின்றது. மேலும், இந்த பிக்கு மத, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஒருவராவார். அதேநேரம் இச்சிறுமி பொருளாதார ரீதியாக கடுமையான வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியாவார். மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும் இந்த சமச்சீரற்ற அதிகாரத்துக்கு முன்னிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியங்கள் மீதும் சாட்சிகளின் மீதும் தாக்கம் செலுத்தப்படுவதற்கான அதிக அபாயம் நிலவுவது எமது அதிகாரசபைக்குப் புலனாகின்றது,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பல்லேகம ஹேமரதன தேரரையும், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவளது தாயாரையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சந்தேகநபர் தரப்பின் சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்டு நீதவான் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸாரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அதுல ரணகல தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பிணைத் தீர்ப்புடன் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பும் நீதியும் கிடைப்பது குறித்துப் பலத்த அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் எனக் கூறப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் சட்ட அமுலாக்கத்தில் அது அவ்வாறு இல்லை என்பதைத் தனது இரண்டு தசாப்த கால சட்டத்தரணி வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை காண முடிந்ததாக அவர் தெரிவித்தார்.