தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சுரேஸ் சலேவை கைது செய்துள்ளமை வரவேற்கத்தக்கது.
பிள்ளையானை முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்தும் நீதி கோரி போராடுகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
கொழும்பில் இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது
மக்கள் விடுதலை முன்னணயின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் பலர் இன்று பதவிகளில் இருந்திருக்க முடியாது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் இன்றும் அநீதி இழைக்கப்படுகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
“தாம் நம்பிக்கை வைத்த அரசியல் கொள்கைக்காகவே அரசியல் கைதிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். ஆகவே அவர்களை சாதாரண குற்றவாளிகளைப் போன்று பார்க்க முடியாது. இது குறித்து கடந்த காலங்களில் கேள்வியெழுப்பிய போது நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என பதிலளிக்கப்பட்டது. ஆனால் அரசியல் கைதிகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கரிசனை கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தினார்.



