இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும். இன்று உலக சந்தையில் “சிலோன் டீ” என்று பெருமையாக விற்கப்படும் ஒவ்வொரு தேயிலைத் துகளின் பின்னாலும், தலைமுறைகள் கடந்த தொழிலாளர் குடும்பங்களின் இரத்தமும் வியர்வையும் புதைந்து கிடக்கின்றன.
ஆனால் அந்த உழைப்பை உலகம் கொண்டா டும் அளவுக்கு, அந்த உழைப்பாளர்களின் வாழ்வுரிமை ஒருபோதும் கொண்டாடப்படவில்லை. அவர்களின் குடி யிருப்பு உரிமை, மனித உரிமை, பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. மலையகத்தில் நடைபெறும் அநீதிகள் பற்றி பேசும்போது, பெரும்பாலும் சம்பளப் பிரச்சினைகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில், அந்த மக்களின் வாழ்வு இன்று பல அடுக்குகளாக ஒடுக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரம் கொண்ட முகாமையாளர்கள், தோட்ட நிர்வாக கட்டமைப்புகள், அரசியல் ஆதிக்கங்கள், தொழிற் சங்க அரசியல், மற்றும் சில சமயங்களில் அரசாங்க ஆதர வாளர்களின் அடக்குமுறைச் செயற்பாடுகள் என பல்வேறு அழுத்தங்கள் ஒன்றோடொன்று கலந்த அமைப்பாக உரு வெடுத்துள்ளது. அவ்வாறான அடக்குமுறையின் சமீபத்திய வெளிப்பாடாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள டெல்மார் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து உண்மையை வெளிக்கொணர முயன்ற ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும் கூற முடியும்.
குறித்த தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் சாதாரண குற்றச் சம்பவமாக மட்டும் கருதப்பட முடியாது. அந்தச் சம்பவம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாக அமைப்புகளுக்கும் இடையில் இன்னும் நிலைத் திருக்கும் அதிகார சமனற்ற நிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
மலையகப் பகுதிகளில் வாழும் பல தொழி லாளர்கள் இன்னும் “வாழும் மனிதர்கள்” என்பதற்குப் பதிலாக “தோட்ட உற்பத்தி இயந்திரங்கள்” போலவே நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் நீடிக்கிறது. தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முயன் றாலோ அல்லது தங்களது உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பினாலோ, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, அச்சுறுத்தல், வேலை இழப்பு, சமூக ஒதுக்கல் போன்ற அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன.
இந்தச் சூழலில், டெல்மார் தோட்டத்தில் இடம் பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் களை சேகரிக்க சுயாதீன ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் எந்த அரசியல் கட்சியின் ஊடக பிரிவாகவோ அல்லது அதிகார அமைப்பின் கருவி யாகவோ செல்லவில்லை. பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பதிவுசெய்யும் நோக்கத்தி லேயே சென்றிருந்தனர். ஆனால் அங்கு நடந்தது ஜனநாயக நாட்டில் நிகழக்கூடாத ஒன்றாகும்.
ஊடகவியலாளர்கள் வரவிருப்பது முன்கூட்டியே பிரதேச மக்களிடம் தெரிவிக் கப்பட்டிருந்த போதிலும், சில அரசியல் தரப்பினரால் மக்கள் ஊடகவியலாளர்களுடன் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய கேள்வி எழுகிறது. ஒரு பிரச்சினை உண்மையில் தீர்ந்துவிட்டதானால், ஊடகம் அங்கு செல்வதை ஏன் அஞ்ச வேண்டும்? தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொழிலாளர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியிருக்க, செய்தி சேகரிப்பதைத் தடுக்க முயற்சிப்பது எதற்காக? இது வெறும் ஒரு பிரதேச சச்சரவு அல்ல. இது அதிகாரம் மற்றும் தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கிடையிலான போராட்டமாகும். மக்கள் தங் களது வலிகளை வெளியில் சொல்லக்கூடாது என்று அரசியல் ஆதரவாளர்கள் முயற்சிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவத்திற்கே எதிரானது. ஊடகவியலாளர்கள் அங்கு சென்றபோது, “பிரச்சினை முடிந்து விட்டது”, “வெளியேறுங்கள்” என்று கூறி அவர்களை அச்சுறுத்தியதாக விவரிக்கப்படுகிறது.
இங்கு முக்கியமானது, பிரச்சினை உண்மையில் முடிந்ததா என்பதல்ல. அந்த முடிவை அறிவிக்கும் உரிமை யாருக்கு உள்ளது என்பதே ஆகும். அந்த இடத்தில் இருந்த மக்கள் தாமாகவே “பிரச்சினை இன்னும் தொடர் கிறது” என்று கூறியதாக அங்கு சென்ற சுயாதீன ஊடக வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் அங்கு மக்கள் வெளிப்படுத்த விரும்பும் விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தோட்ட முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவதன் ஊடாக மாத்திரம் இவ்வாறான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில்லை.
தொழிலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படு கிறார் கள், தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தப்படுகிறார் கள், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பொருள், பிரச்சினையின் அடிப்படை இன்னும் எவ்வித மாற்றமும் இன்றி அவ்வாறே தொடர்கிறது என்பதேயாகும். இலங்கையில் ஊடக சுதந்திரம் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் கொழும்பு மையப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.
ஆனால் மலையகத்தில் பணிபுரியும் சுயாதீன ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. மலையகத்தில் ஒரு பிரச்சினையை பதிவு செய்வது என்பது வெறும் கேமரா (Camera) எடுத்துச் செல்வதல்ல. அது பல அதிகார மையங்களை எதிர்கொள்வதாக மாறுகிறது. தோட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல், தொழிற்சங்கப் போட்டிகள், காவல்துறை கண் காணிப்பு, சமூக அழுத்தம் — இவை அனைத்தையும் கடந்து தான் ஒரு செய்தி வெளிவருகிறது.
அதனால்தான் பல சம்பவங்கள் ஒருபோதும் வெளிச்சத்திற்கே வருவதில்லை. பல தொழிலாளர்கள் ஊடகங்களிடம் பேச அஞ்சுகிறார்கள். ஏனெனில் அவர்கள் வேலை இழக்கக்கூடும். குடியிருப்பு இழக்கக்கூடும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படக்கூடும். சில சமயங்களில் நேரடி மிரட்டல்களும் இருக்கின்றன. இந்த நிலையில், சுயாதீன ஊடகவியலாளர்கள் மலையக மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய முன்வருவது ஒரு சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும். ஆனால் அதேநேரத் தில், அவர்களை “விஷமிகள்” என குற்றம்சுமத்தி அங்கி ருந்து வெளியேற்ற முயற்சிப்பது மிகவும் ஆபத்தான அரசியல் போக்காகும்.
நீலகாமம் முதல் டெல்மார் வரை — தொடரும் அச்சுறுத்தல்
டெல்மார் தாக்குதல் சம்பவம் தனித்த சம்பவமல்ல என்பதை புரிந்துகொள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் பகுதியில் அண்மையில் நடந்த சம்பவங்களையும் நினைவு கூர வேண்டும். அங்கும் ஒரு தற்காலிக குடியிருப்பை கருப்பு ஆடை அணிந்த குண்டர் குழுவினர் அடித்து நொறுக்கியதாக கூறப்பட்டது. அந்தச் சம்பவமும் மலையக மக்களின் வாழ்வுரிமை, காணி உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியது.
அந்தச் சம்பவம் தொடர்பிலும், உண்மையை வெளிக்கொணர முயன்ற சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. இவ்வாறான சம்பவங்க ளின் போது மலையக மக்களின் உரிமை பற்றி பேசும் தருணங்களில், அந்தக் குரல்களை கட்டுப்படுத்த முயலும் சக்திகள் செயல்படுகின்றன. இந்த நிலை மிகவும் ஆபத் தானது. ஏனெனில் ஜனநாயகத்தில் பிரச்சினைகளை ஒடுக்குவது தீர்வை உருவாக்காது. மாறாக, அது வெடிக்கும் சமூக விரக்தியை உருவாக்கும்.
“முற்போக்கு” அரசியலும் அடிமட்ட உண்மைகளும்
மலையக அரசியல் இன்று ஒரு முக்கியமான மாறுபட்ட கட்டத்தில் இருப்பதாக பலர் பேசுகின்றனர். புதிய அரசியல், புதிய தலைமுறை, புதிய முற்போக்கு அரசியல் என்ற கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அடிமட்டத்தில் நடைபெறும் செயல்பாடுகள் அந்தக் கோஷங்களுடன் பொருந்துகிறதா? என்பது கேள்விக்குறி யாக உள்ளது.
ஊடகங்களை அச்சுறுத்தும் அரசியல், மக்களை பேசவிடாத அரசியல், பிரச்சினைகளை மறைக்க முயலும் அரசியல், தனக்கு எதிரான குரல்களை “விஷமிகள்” என சித்தரிக்கும் அரசியல் இவை எந்தக் காலத்திலும் முற் போக்கு அரசியலாக இருக்க முடியாது. மாறாக, அது பழைய ஒடுக்குமுறை அரசியலின் புதிய வடிவமாகவே பார்க்கப்படும். மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னும் தேசிய அளவிலான அரசியல் உரையாடலின் மையத்துக்கு வரவில்லை.
தேர்தல் காலங்களில் மட்டுமே அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வி யல் பிரச்சினைகள் — வீடு, காணி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பெண்கள் மீதான வன்முறை, தொழிலாளர் மரியாதை இவை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றன. மலையகத்தின் எதிர்காலம் பற்றி பலர் பேசுகின்றனர். ஆனால் உண்மையான புதிய மலையகம் உருவாக வேண்டுமெனில், முதலில் அச்சமின்றி பேசக்கூடிய சமூக சூழல் உருவாக வேண்டும்.
ஒரு தொழிலாளர் தன் வலியை சொல்ல அஞ்சக் கூடாது. அதேநேரம் மக்களின் குரல்களை கேட் கும் அரசியல் உருவாக வேண்டும். டெல்மார் மற்றும் நீலகாமம் போன்ற சம்பவங்கள் இன்று ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகின்றன. மலையகத்தின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அது வெறும் சம்பளப் போராட்டமல்ல.
அது மனித கண்ணியம் மற்றும் உரிமைக்கான போராட்டமாகும். அந்தப் போராட்டத்தில் சுயாதீன ஊடகவி யலாளர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர் களை அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை நிரந்தரமாக மூடி மறைக்க முடியாது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் எப்போதும் ஒரு வழியை கண்டுபிடிக்கும். மலையகத்தின் மண்ணில் இன்னும் பல மௌனக் கதைகள் புதைந்து கிடக்கின்றன. அந்தக் கதைகள் வெளிவர வேண்டும். அந்த மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகமும், மனித கண்ணியமும், சமூக நீதியும் இந்த நாட்டில் அர்த்தமுள்ளதாகும்.



