சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நேற்று (18) இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அழுத்தங்களை மீறி முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர், தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்கப்படவேண்டிய சர்வதேச முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மிக முக்கியமான இடமான முள்ளிவாய்காலில் மனித உரிமை கண்காணிப்பகம் சார்பாக பிரசன்னமானமை மிகவும் முக்கியமானதெனவும் அவர் குறிப்பிட்டார்
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்காக அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியையும் பியர்சன் விமர்சித்தார்.
“ஜெனிவாவில் மனிதஉரிமைபேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தீர்மானங்கள் மட்டும் போதாது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson) விசனம் வெளியிட்டார்.



