இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வும் கஞ்சி விநியோகமும் இன்று(18) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர், சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கோடீஸ்வரன் “மே 18முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து இன்றுடன் 17ஆண்டுகள் கடந்த நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள், வடுக்கள், ஆறாரணங்கள் மாறப்போவதில்லை” என்று தெரிவித்தார்.
“தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கத்தோடும், சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.
எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாகி இருக்கின்றார்கள்.
இலட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள்.
அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
“17 வருடங்கள் கடந்த நிலையிலும், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம்”.
2009-ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், எங்களது அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் தொடர்ந்தும் நீடிக்கும்.
“எங்களது விடிவு கிடைக்கும் வரை நாங்கள் அந்தத் தொடர்ச்சியான அழுத்தங்களை சர்வதேசத்திற்குக் கொடுத்து நிற்போம் என்கிற இந்த செய்தியையும் இந்த இடத்திலே கூறிக்கொள்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.



