சர்வதேச அளவில் இலங்கையை விளம்பரப்படுத்த மெகா டிஜிட்டல் திட்டம்! – பிரதி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கான விசேட டிஜிட்டல் ஊக்குவிப்பு விளம்பர திட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (17)  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முதற்கட்டமாக இந்தியா சீனா இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இந்த டிஜிட்டல் சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக சுமார் 1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் குறுகிய காலத்திற்குள் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வருடத்தின் இறுதி பகுதியில் சுமார் 5 பில்லியன் ரூபா செலவில் பல வருடங்களுக்கு நீடிக்கக் கூடிய வகையில் பாரியளவிலான தேசிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்கள் இத்துறையை சார்ந்த அனைத்து முதலீடுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் உலகளாவிய ரீதியில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும் இந்த புதிய உத்திகள் மூலம் இவ்வருடத்தில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும். அது நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.