சீரற்ற வானிலை : ஹக்கலையில் கூடாரங்களில் வாழும் 23 குடும்பங்கள்!

நுவரெலியா, ஹக்கலை பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவினால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாரிய உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் இவர்களின் நிலைமை, கடும் காற்றுடன் கூடிய மழையினால் மேலும் மோசமடைந்துள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக தமது வாழ்விடங்களை இழந்த இக்குடும்பங்கள், தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வீசி வரும் கடும் காற்றைத் தாங்கும் சக்தி இந்தக் கூடாரங்களுக்கு இல்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூடாரங்கள் காற்றில் பறக்கும் நிலையில் உள்ளதால், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுடன் இரவு நேரங்களைக் கழிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிக வசிப்பிடங்களைச் சுற்றி விஷப் பாம்புகள் மற்றும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தமது அவல நிலை குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்தமைக்காக, வெளிமடை பிரதேச சபையைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தங்களைக் கடுமையாகத் திட்டியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “நாங்களாகத் தீர்மானித்து எதனையும் செய்யும் வரை யாரிடமும் இது பற்றிக் கூற வேண்டாம்” என அதிகாரிகள் தங்களை எச்சரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில் பொது இடங்களிலும் தோட்டக் கோவில்களிலும் தங்கியிருந்த இவர்களுக்கு, நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

“அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த நரக வாழ்க்கையிலிருந்து எமக்கு விடிவு வேண்டும். உடனடியாக எமது வீடுகளைப் புனரமைத்துத் தர வேண்டும் அல்லது பாதுகாப்பான வேறு இடத்தில் மீளக் குடியமர்த்த வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.