ஊடகவியலாளர் லசந்த படுகொலை : லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்க அதிருப்தி

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

லசந்தவுக்காக நாம் அமைப்பின் சார்பில் கொழும்பில்  நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

லசந்த படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகியும், இதுவரை மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது எமக்கும் தெரியும், விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் தெரியும், படுகொலை செய்தவர்களுக்கும் தெரியும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தான் மக்கள் மத்தியில் குரோதமும், சந்தேகமும், அமைதியின்மையும் நிலவுகிறது.

ஒரு வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் போது சாட்சிகள் அவசியம் என்பது எனது கருத்து. ஆனால், இங்கே சாட்சிகளை முன்வைப்பதற்கு முன்னரே, இதில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் நினைத்தால் இதைவிட நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் லசந்தவின் கொலை தொடர்பில் இதுவரை அது நடக்கவில்லை.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான சாட்சிகள் இருந்தும் ஏன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை? ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சாட்சிகளை மாற்றியமைத்தது தொடர்பில் தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? லசந்த கொலை செய்யப்பட்ட போது அவரது நாட்குறிப்பை  எடுத்துச் சென்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஏன் வழக்குத் தொடரப்படவில்லை? இவ்வாறான வெளிப்படையான விடயங்களுக்கு முதலில் வழக்குத் தொடர்ந்தாலே, பிரதான கொலை வழக்கிற்கான சாட்சிகள் தானாகவே வலுப்பெறும்.

எமது நாட்டில் அரசியல்வாதிகள் இரண்டு விடயங்களை மட்டுமே செய்கிறார்கள். ஒன்று வாக்குகளைப் பெறுவது, மற்றொன்று தாம் எடுக்கும் தீர்மானங்களால் வாக்குகள் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது. லசந்த விக்ரமதுங்க, கீத் நோயர் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவு என்பன இராணுவத்தின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனத்தில் ஒரு சிறு குழு தவறு செய்யும்போது அந்த நிறுவனத்துக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. அத்தகையோரை நீக்கிவிட்டு நிறுவனத்தைக் காப்பாற்றுவதே முறை. ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகள் அவர்களை ‘ரணவிருவோ’ (மாவீரர்கள்) என்று கூறி காப்பாற்றுகிறார்கள். காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்களாக முடியாது. இதனை ஒரு தேசமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.

லசந்த சர்வதேச ரீதியாக ஒரு வீரராகப் போற்றப்படுகிறார். ஆனால் சொந்த நாட்டிலேயே அவர் கொல்லப்பட்டார், பத்திரிகை நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. இதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நான் சந்தித்தபோது, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் உறுதியளித்தார். அந்த நம்பிக்கையிலேயே நான் இன்னும் காத்திருக்கிறேன் என்றார்.