சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட விசேட ஒப்பந்தம் இன்று(13) சீனாவில் கைச்சாத்திடப்பட்டது.

சிரச ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான MTV நிறுவனம் மற்றும் சீனாவின் TDM மக்காவ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவில் நடைபெற்ற ஆசிய – பசுபிக் ஔி, ஒலிபரப்பு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு இணையாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை மற்றும் சீனாவின் மக்காவ் பிராந்தியத்திற்கு இடையிலான ஊடக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

MTV நிறுவனம் சார்பில் குழும பணிப்பாளர் ஷெவான் டெனியல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுடன், TDM மக்காவ் நிறுவனம்  சார்பில் அதன் செயற்குழு தலைவரும் பணிப்பாளர் சபையின் உப தலைவருமான Lorman Lo Song Man கைச்சாத்திட்டார்.