வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை ஒரு உள்நாட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், செஞ்சிலுவை சங்கத்தினால் கடந்த 5 – 7ஆம் திகதி வரை கொழும்பில் மூடிய அறை கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய சுமார் 20 பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ‘இனிவருங் காலங்களில் செஞ்சிலுவை சங்கம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் நேரடியாகப் பணியாற்றப்போவதில்லை என்றும், மாறாக நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கும் பங்காளியாக மாத்திரமே செயற்படும் என்றும் பங்கேற்பாளர்களிடம் கூறப்பட்டுள்ளது’ என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிவயோகநாதன், நீதி அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் சந்திப்புக்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வோதயம் அமைப்பு கையாளும் என விசனம் வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று ‘ஆரம்பகட்ட முயற்சிகள் வட மாகாணத்தை மையமாகக்கொண்டு முன்னெடுக்கப்படும். அம்முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில், அதனைக் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பெண்கள் சிலர் இம்முயற்சிக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, ஏனைய பாதிக்கப்பட்ட தரப்பினர் இவ்வாறான நடவடிக்கைகள் மூலும் சர்வதேச நீதிக்கான தமது நீண்டகாலக் கோரிக்கைகள் படிப்படியாகப் பலவீனமடைந்துவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்’ என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணையவேண்டும் என அழைப்புவிடுத்துள்ள அவர், சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறும், நீதிக்கான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் சகல தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளார்.



