ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதி அமைச்சர் விளக்கம்!

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி ஜனாதிபதி முன்கூட்டியே குறிப்பிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றில் விளக்கமளித்துள்ளார்.

வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது பொதுவானதொரு விடயமாகும் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. நீதிமன்றமே அறியும். ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவர்.

அதன் காரணமாகவே தற்போது திணறுகிறார்கள் என்றும் போலியான விடயங்களை முன்வைக்கிறார்கள் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

“சர்வதேச ஊடக சுதந்திர சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

ஊடக சுதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் தான் செய்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யுரைக்கிறார்கள். நாட்டு மக்கள் இதனை தற்போது நம்புவதுமில்லை.

ஊடக நெறியாக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் ஊடகங்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றன.

அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தில் கை வைப்பதாக எதிர்க்கட்சியினர் தற்போது அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.

முன்னாள் பிரதம நீதியரசர்களின் வீடுகளுக்கு கல்லெறிந்து மோசமான வகையில் அவர்களை பதவி நீக்கி விட்டு, அவர்களின் வீட்டின் முன்பாக பாற்சோறு சமைத்து சாப்பிட்டவர்கள் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்” என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார எதிர்க்கட்சியினரை விமர்சித்தார்.

பல மோசடிகள் குறித்து சுயாதீனமாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வழக்குகள் பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.