அதிகாரத்தின் நிழலும் கொள்கை மாற்றங்களும் :விதுரன்

இலங்கை அரசியலின் மிகச்சிறந்த சட்ட மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தனது கல்விப் புலமையால் எவ்வளவு தூரம் புகழ்பெற்றாரோ, அதேயளவு தனது அரசியல் முரண்பாடுகளுக்காகவும் விமர் சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து விலகி, 1990-களின் நடுப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட பீரிஸ், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமை ப்பு வரைவுகளைத் தயாரிப்பதில் முதன்மையானவராகத் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை ஆற்றிய அவர், சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும், அது வொரு பரந்துபட்ட அரசியல் தத்துவம் என்றும் வெளிப் படுத்திய கருத்துக்கள் அவரது நீண்டகால அரசியல் பய ணத்தின் சுவாரஸ்யமான மற்றும் விமர்சனத்திற்குரிய திருப்புமுனையாக மாறியுள்ளது.
பேராசிரியர் பீரிஸின் அரசியல் வாழ்வை மூன்று பிரதான கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, சமாதான தேவதையாக வந்து போர்த் தேவையாகிய சந்திரிகா குமாரதுங்கவின் காலப்பகுதியில் அவர் தயாரித்த 1995-2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள். அடுத்து இரண்டாவது, சாணக்கியங்கள் நிறைந்த ரணில் விக்கிரமசிங்கவின் 2002 சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள்.
மூன்றாவது, தமிழினப் படுகொலையின் காரண கர்த்தாவான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் போரையும், அதன் பின்னரான மனித உரிமை மீறல் குற் றச்சாட்டுகளையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்திய காலங்கள்.
இந்த மூன்று கட்டங்களிலும் பீரிஸ் வகித்த பாத் திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பதுடன், ஒரு கல்விமானாக அவர் எவ்வளவு தூரம் அதிகார மையங்களுக்கு விசுவாசமாகத் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டார் என்பதற்கான சிறந்த சான்றுகளாகும்.
யாழ்ப்பாணத்தில் அவர் ஆற்றிய உரையில், சமஷ்டி முறை மையின் தோற்றம் சிங்களத் தலைமைகளிடமிருந்தே (குறிப்பாக கண்டிச் சிங்களவர்கள் மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க) ஆரம்பமானது என்ற வரலாற்றுப் பின்னணியை அவர் சுட்டிக்காட்டினார். இது தத்துவார்த்த ரீதியாகச் சரியானது என்றா லும், அந்தச் சமஷ்டிக் கொள்கை ஏன் இன்று தென்னிலங் கையில் ‘அரசியல் தீண்டத்தகாத’ சொல்லாக மாறியிருக்கி றது என்பதற்கான தனது பொறுப்பினை அவர் தட்டிக்கழித் துள்ளார்.
குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது, 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதையோ அல்லது சமஷ்டி என்ற சொல்லையோ அவர் ஒருபோதும் தென்னிலங்கை மக்களிடம் கொண்டு செல்லவில்லை.
மாறாக, அதிகாரப்பகிர்வைக் கோருபவர்களைப் பிரிவினைவாதிகளாகச் சித்தரிக்கும் பேரினவாத அரசிய லின்
முக்கிய அங்கமாகவே அவர் அப்போது செயற்பட்டார். தீவிரமான பிரசாரங்களையும் தாராளமாகச் செய்தார்.
2000ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவு என்பது இலங்கையின் வரலாற்றில் அதிகாரப் பகிர்வு குறித்து முன்வைக்கப்பட்ட மிக விரிவான ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற அடிப்படையில் அவர் முன்மொழிந்த அந்தத் திட்டம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.
ஆனால், இன்று அந்தத் திட்டத்தின் தோல்விக்கு தமிழீழ விடுதலைப் புலிகளையும் நீலன் திருச்செல்வத்தின் படுகொலையையும் மட்டுமே அவர் காரணமாகக் காட்டுகிறார். ஆனால், அதே காலகட்டத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் துருவப்படுத்தல்களையும், தனது அரசியல் இலாபங்களுக்காகத் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து அவர் அணி மாறியதையும் அவர் கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் பூனைபோன்று வசதியாக மறைத்துவிட்டார்.
ஒரு சட்டப் பேராசிரியர் என்ற வகையில், அவர் உருவாக்கிய வரைவுக்கான அறச்சீற்றத்தை விட, அதி காரத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரமே அவரிடம் மேலோங்கியிருந்தது என்பது தான் கசப்பான யதார்த்தமா கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார் த்தை தோல்வியடைந்தமை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் ஆழமான விமர்சனத்திற்குரியவை. தத்து வாசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஒரு யதார்த்தவாதி என்றும், பிரபாகரன் ஒரு பிடிவாதக்காரர் என்றும் அவர் கூறுவது, ஒரு வரலாற்றுத் தர்க்கமாக அவர் காண்பிக்க முற்படலாம். ஆனால், அதே பேச்சுவார்த்தைக் மேசையின் மறுபுறம் இருந்த பீரிஸ் தலைமையிலான அரசாங்கத் தரப்பு, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்புடன் இருந்தது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
2002இல் சமஷ்டி முறைமைக்குள் தீர்வைக் காண்ப தாக ‘ஒஸ்லோ பிரகடனத்தில்’ கையெழுத்திட்ட பீரிஸ், சில ஆண்டுகளிலேயே அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி, அதே சமஷ்டி முறையை எதிர்க்கும் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டது அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உச்சமாகும்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சர்வதேச அரங் கில் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்த போர்க்குற்றச் சாட்டுகளிலிருந்து அரசைப் பாதுகாக்க அவர் ஆற்றிய பங்கு காத்திரமானது. ஒரு சட்ட மேதையாக, அவர் போரை‘ மனிதாபிமான மீட்பு நடவடிக்கை’ என்று வர்ணித்தார்.
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப் பட்டதையும், நீதிக்கு புறம்பான படுகொலைகளையும் மூடிமறைக்கத் தனது ஆங்கிலப் புலமையையும், சட்ட அறிவையும் அவர் கருவியாக்கினார்.
இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர், யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பேரு ரையை ஆற்றுவதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி எழுந்ததில் எவ்வித தவறுமில்லை.
தந்தை செல்வா தனது வாழ்நாள் முழுவதும் அறவழியில் நின்று, தனது கொள்கைகளுக்காக எதையும் விட்டுக்கொடுக்காத ஒரு தலைவராகத் திகழ்ந்தார். ஆனால், பீரிஸோ தனது அரசியல் இருப்புக்காகக் கொள்கைகளை ‘அடகு’ வைத்தார், இன்னமும்; வைத்துக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அவர் யாழ்ப்பாண விஜயத்தில், தமிழ் அரசுக் கட்சியுடன் அவர் ஏற்படுத்திக்கொள்ள முயலும் இணக்கப்பாடு கூட தேர்தல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அவர் இப்போது வலியுறுத்துவது, அதிகாரப்பகிர்வு மீதான அக்கறையினால் அல்ல, மாறாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளு வதற்காகவேயாகும்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, தென்னிலங்கை அரசியலில் மீண்டும் செல்வாக்கைப் பெற அவர் முற்படுகிறார்.
‘சமஷ்டி’ என்பது தத்துவார்த்த ரீதியாக ஒரு பரந்து பட்ட அரசியல் தத்துவம் என்று அவர் கூறுவது சரிதான், ஆனால் அந்தத் தத்துவத்தை தென்னிலங்கைச் சிங்கள மக்களிடம் கொண்டு சென்று அவர்களைப் புரிய வைக்கும் துணிச்சல் அவருக்கு இன்றும் இல்லை என்பது தான் துரதிஷ்டமானது. யாழ்ப்பாணத்தின் எரிந்த நூலகத்தையும், கறுப்பு ஜூலை வன்முறைகளையும் தனது உரையில் குறிப்பிட்ட பீரிஸ், அந்தத் துயரங்களுக்குப் பின்னால் இருந்த அரசியல் சக்திகளுடன் தானும் கைகோர்த்துச் செயல்பட்டவர் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறாரா என்பது தெரிய வில்லை.
ஆட்சியாளர்கள் தவறான பாதையில் செல்லும் போது, அவர்களைச் சரிப்படுத்தும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய பேராசிரியர், ஆட்சியாளர்களின் தவறுகளைச் சட்டப்பூர்வமாக்கும் கருவியாகவே நீண்ட காலம் செயல்பட்டிருக்கிறார்.
அந்த வகையில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் அரசியல் பரிணாமம் என்பது ஒரு ‘நிலைப்பாடற்ற மேதை யின் கதை’ ஆகவே உள்ளது. அவர் தயாரித்த அரசியலமைப்பு வரைவுகள் மிகச்சிறந்தவை, அவர் முன்வைக்கும் தத்துவார்த்த வாதங்கள் வலுவானவை. ஆனால், அந்த வாதங்களுக்குப் பின்னால் ஒரு நேர்மையான அரசியல் உறுதிப்பாடு இல்லை.
தற்போது அவர் பேசும் சமஷ்டியும், அதிகாரப் பகிர்வும் தமிழ் மக்கள் மீதுள்ள அன்பினால் வந்தவை அல்ல, மாறாக தற்போதைய அரசியல் சூழலில் அவருக்குத் தேவைப்படும் கவசமாகும். நாட்டின் அரசியல் தீர்வை முன்னெடுக்கும் தலைமைத்துவத்திற்குத் தேவையானது கல்விப் புலமை மட்டுமல்ல, மாறாக இக்கட்டான காலங்களிலும் மாறாத கொள்கைப் பற்றுறுதியாகும். பேராசிரியர் பீரிஸ் அந்தப் பற்றுறுதியில் தோற்றுப்போன வரலாற்றுப் பாத்திரமாகவே வரலாற்றில் இடம்பெறுவார்.
அவரது யாழ்ப்பாண விஜயமும் உரையும் ஒரு விடயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்குத் தேவைப்படும்போது பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான்.
சமஷ்டியைப் பிரிவினைவாதம் என்று கூறி ஆட்சி க்கு வந்தவர்கள், அதேசமஷ்டியை தத்துவமாக விளக்குவது நகைப்புக்குரியது. உண்மையான மாற்றம் என்பது உரைக ளில் இல்லை.மாறாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கடந்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீ கரிக்கும் நேர்மையான அரசியல் முன்னெடுப்பிலேயே தங்கியுள்ளது.
பேராசிரியர் பீரிஸ் தனது எஞ்சிய அரசியல் காலத்திலாவது, தான் தயாரித்த 2000ஆம் ஆண்டு வரைவை விடவும் மேலான தீர்வை தென்னிலங்கை மக்களிடம் வெளிப்படையாக ஆதரிப்பாரா என்பதே அவருக்கான இறுதிப் பரீட்சையாக அமையும்.