யாழ்ப்பாணம் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகளின் தங்குமிடத்துக்கு முன்பாக நேற்றைய தினம் (01) குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு தங்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை இன்றும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (24) முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
இதன்படி, இன்றைய தினம் (01) அவர்கள் போராட்டத்தை முன்னடுத்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த இடத்துக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அந்த மக்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பதாகவும் இந்த போராட்டத்திற்கு தான் பூரண ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.



