இலங்கை மீனவரை தாக்கிய தமிழக மீனவர்கள்!

யாழ்ப்பாணம் – பலாலி வடக்கிலிருந்து 15 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மூவர் மீது தமிழக கடற்றொழிலாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஐந்து தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வாளால் வெட்டியும், பெற்றோல் குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவரை பலவந்தமாக தமது படகில் ஏற்றிச் சென்றுள்ள நிலையில், மற்றைய இருவர் தப்பி மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடத்திச் செல்லப்பப்பட்ட கடற்றொழிலாளரை கயிற்றால் கட்டி அடித்து துன்புறுத்தும் காணொளிகள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கீழையூர் காவல்துறையினர் குறித்த யாழ்ப்பாண கடற்தொழிலாளரை மீட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அவரை நாகப்பட்டினம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சில கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில், ‘எமது கடற்றொழிலாளர்களில் ஒருவரை தமிழ்நாட்டை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் மிகவும் கவலைக்குரியது.

இத்தகைய வன்முறைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை. அரசு உடனடியாக தலையிட்டு, அவரின் உடனடி பாதுகாப்பை உறுதி செய்து, அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

இந்தச் சம்பவம், வட மாகாணத்தைச் சேர்ந்த எங்கள் கடற்றொழிலாளர்களை பாதுகாக்க வலுவான எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதில் திறமையாக இருந்தாலும், தமிழ்நாடு நிலப்பரப்பில், அங்குள்ள காவல்துறையினரின் முன்னிலையில் எங்கள் கடற்றொழிலாளர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது கவலைக்குரியது” என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.