தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
நாளை வெள்ளிக்கிழமை (24) முதல் ஆரம்பமாகும் உலக தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
1978ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி வழங்குவதில் இலங்கை சர்வதேச ரீதியில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தின் மூலம் போலியோ , பிறந்த குழந்தைக்கான தசைவலிப்பு மற்றும் ருபெல்லா போன்ற நோய்கள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளன.
உலக தடுப்பூசி வாரம் ஏப்ரல் 24 முதல் 30 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



