அமெரிக்காவுடன் 2-வது கட்ட பேச்சு நடத்த ஈரான் நிபந்தனை!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் தற்போது திட்டமிடவில்லை என்று, திங்கள்கிழமை நள்ளிரவு ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் அமெரிக்கா-ஈரான் இடையேயான சாத்தியமான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்கக் குழு இஸ்லாமாபாத் செல்லத் தயாராகி வரும் வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து எங்களிடம் இன்னும் எந்தத் திட்டங்களும் இல்லை, அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று ஏப்ரல் 20-ஆம் திகதி  நடைபெற்ற தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பாகாய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் போர் முடிவுக்கு வருவது தொடர்பாக விரைவில் ஏதேனும் நற்செய்தி வரக்கூடும் என்ற நம்பிக்கையை, திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் வெளியிட்ட சில கருத்துகள் ஏற்படுத்தின. ஆனால் இந்த நம்பிக்கை சில மணிநேரம் மட்டுமே நீடித்தது. அதன்பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரானிடமிருந்து வந்த தொடர் அறிக்கைகள், அமைதி இன்னும் வெகு தொலைவில் இருப்பதாகவே உணர்த்துகின்றன.