கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதி அமைச்சரிடம், கச்சதீவு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரசாரமாகவே இந்த விவகாரத்தைப் பார்ப்பதாகவும், இது குறித்து இலங்கை அரசாங்கம் தேவையற்ற வகையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சதீவு என்பது முறையான இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட ஒரு பகுதி என்பதை பிரதி அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டதுடன், பின்னர் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியக் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் வலைகளை உலர்த்துவதற்கும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வரும்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் காலங்களில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், அதனை இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.



