கன்னியா வெந்நீரூற்று வருமான விவகாரம்: உள்ளூர் அதிகாரசபையின் உரிமைகள் மறுக்கப்படுதாக விசனம்

வடக்கு மற்றும் கிழக்கிலே தமிழ் தேசியக் கட்சிகளுக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை உணர்ந்து தமிழ் தேசியக் கட்சிகள் உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று, செட்டிபாளையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்களைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார். இந்த

அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பல வாக்குறுதிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்றும், 25 வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்றும், பௌத்த மயமாக்கல் இனி நடைபெறாது என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் வழங்கிய இந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம், இவ்வாறான சூழலிலும் தமிழ் தேசியக் கட்சிகள் இன்னும் ஒன்றுபடாமல் இருப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகமாகவே அமையும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் சிதறிக்கிடக்கும் தமிழ் சக்திகள் ஒரே கட்டமைப்பின் கீழ் அணிதிரள வேண்டியது அவசியம் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.