உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இராணுவ புலனாய்வு பிரிவு மீதும் விசாரணைக்கு கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம். அதேபோன்று மஹசோன் பலகாயவுக்கு பின்னால் சிரேஷ் சலே இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் சிரன்த அரசிங்க தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கூற்றை அடிப்படையாகக்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை நேற்று கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதல் 2017 முதல் படிப்படியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என விசாரணைகளின்போது வெளிவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். சஹ்ரானுக்கு இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள அந்த காலப்பகுதியில் அவருக்கு பின்னால் யாரும் இருக்கவில்லை.  இவ்வாறான நிலையில் 2018  பெப்ரவரி 26ஆம் திகதியில் இருந்து தெல்தெனிய, அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மூலம் முஸ்லிம் விராேத சம்பவங்கள் இடம்பெற ஆரம்பித்தன. அந்த சம்பவங்கள் சஹ்ரானுக்கு முஸ்லிம் குழுக்களை இணைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

அத்துடன் இந்த அசம்பாவிதங்களுக்கு பின்னால் மஹசோன் பலகாயவே இருந்தது. அந்த மஹசோன் பலகாயவே அண்மையில் திருகோணமலையில் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு  நீதியை தேடிச்செல்லும் அரசாங்கத்தை நிலையற்றதாக்க முயற்சிக்கிறது. இதனை நாங்கள் தெளிவாக கண்டோம். மஹசோன் பலகாய இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் அசம்பாவிதங்களை மேற்கொள்ளும்போது அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

2018ல் இடம்பெற்ற சம்பவத்துக்காக அமித் வீரசிங்கவை கைது செய்தார்கள்.அவரின் உதவியாளர்களே திருகோணமலை சம்பவத்துக்கு பின்னால் இருக்கிறார்கள். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவின் சுரேஷ் சலே உள்ளிட்ட சிலர் தொடர்பு இருப்பதாக தெரிவித்து, இவர்களுக்கு எதிராக நாங்கள் 2021 நவம்பர் 15ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தாேம். அந்த முறைப்பாட்டுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அதேபோன்று  குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரான் குற்றச்செயல் ஒன்றை செய்தபோது, ராணுவத்தில் இருக்கும் மேஜர் ஜனரல் ஒருவர் சஹ்ரானை அழைத்து, அவருத்து எச்சரிக்கை செய்து அனுப்பினார். இதுதொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் எனது முறைப்பாட்டின் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்பது, சஹ்ரான் இராணுவ அதிகாரியா? அல்லது இராணுவ புலனாய்வு அதிகாரியா? என்பதாகும்.

அதேநேரம் அண்மையில் சுரேஷ் சலேக்கு எதிராக சாட்சி கூறுவதற்கு வந்த ஒருவருக்கு ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியிலே நாங்கள் இந்த முறைப்பாட்டை கையளித்து, இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம். அதேபோன்று மஹசோன் பலகாயவுக்கு பின்னால் சிரேஷ் சலே இருக்கிறாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. ஏனெனில் திருகோணமலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த குனார குணதிலக்க என்பவர் மஹசோன் பலயாகவைச் சேர்ந்தவர். அவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

அதனால் சலே போன்றவர்கள் இணைந்து மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிலர்  இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை புனர்வாழ்வளித்து, ராணுவ புலனாய்வு பிரிவை முறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.