மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் அ.தர்சினி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
ஏனைய நான்கு முக்கிய சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அவர் இதன்போது கட்டளையிட்டார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
அத்துடன், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
கிழக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டலில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட அவர்களது உறவினர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டனர்.
மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நகைக்கடை உரிமையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



