தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு, காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று முந்தினம் (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்யாமல் , காணிகளை விடுவியுங்கள் என்று கோரியதாகவும். அதற்கு அவர்கள் காணிகளை அளவீடு செய்து உறுதியில் உள்ள காணிகளின் அளவின் அடிப்படையிலையே காணிகளை உரியவர்களிடம் கையளிப்போம் என்று கூறியதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது 17 பேர் மாத்திரமே காணி உறுதிகளை கொடுத்து காணிகளை மீட்க தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் விகாரை அமைந்துள்ள பகுதியில் தங்கள் 17 பேரின் காணிகளை தவிர மேலும் சிலரின் காணிகளும் உள்ளதாக அவர் தெரிவித்தனர்.
இதேவேளை, “காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம்”. “நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம்” என்று காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்த காணி அளவீட்டு பணியானது , எமது காணிகளை விகாரைக்காக நிரந்தரமாக சுவீகரிக்க எடுக்கும் முயற்சியாக இருக்க கூடாது என்று வலியுறுத்தினோம். கடந்த கால கசப்பான அனுபவங்களை கூட நாம் தெரிவித்தோம்” என்றும் காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



