வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியை இராஜினாமா செய்யுமாறு கோரி வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற நுழைவுவீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இந்த போராட்டம் நடைபெறுவதால், அந்தப் பகுதியிலான போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டு, தரமற்ற நிலக்கரி கொள்வனவு காரணமாக நாட்டிற்கு பில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், அந்த விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தை மையமாகக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.



