விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: பேச்சுவார்த்தையைப் பாதிக்குமா? ட்ரம்ப் கருத்து

அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு சுருக்கமான தொலைபேசி நேர்காணலில், நேற்றைய (ஏப்ரல் 3) நிகழ்வுகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், “இல்லை, சிறிதும் இல்லை. இது போர். நாம் போரில் இருக்கிறோம்,” என்று பதிலளித்தார் என்றும் என்.பி.சி நியூஸ் தெரிவிக்கிறது.

ஈரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தெற்கு ஈரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அந்த அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க விமானத்தில் இருந்த இரண்டாவது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நபரை தேடும் பணியில் அமெரிக்க இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இரான் பாதுகாப்பு படைகளும் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது.