உலகளாவிய ரீதியில் “சிலோன் டீ” என்ற வர்த்தக நாமம் இலங்கைக்குப் பெரும் புகழையும் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களின் நாவிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் இந்தத் தேயிலை, இன்று ஒரு இக்கட்டான காலப்பகுதியைக் கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இலங்கைத் தேயி லையின் பிரதான சந்தையாகக் கருதப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச மட்டத்திலான கேள்வி அதிகரித்துள்ளது என்பது வியக்கத்தக்க அதேவேளை மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியற்ற சூழல் மற்றும் போர் அச்சுறுத்தல்கள் ஆரம்பத்தில் தேயிலை ஏற்றுமதியில் ஒருவித மந்தநிலை யைத் தோற்றுவித்தன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணைப்பு (Hormuz) மூடப்பட்டமை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக குவைட், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான நேரடி ஏற்றுமதிப் பாதைகள் முடங்கின.
இருப்பினும், இந்த நெருக்கடி ஒரு எதிர்பாராத சாதகமான நிலையையும் உருவாக்கியுள்ளது. யுத்த அச்சம் காரணமாக அங்கிருக்கும் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு கலாசார ரீதியான பானமாகவும், நீண்ட காலம் சேமித்து வைக்கக்கூடிய பொருளாகவும் தேயிலை இருப்பதால், அதற்கான கேள்வி சடுதியாக அதிகரித்துள்ளது.
இலங்கைத் தேயிலைச் சபையின் தரவுகளின்படி, கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. ஏலத் தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே காணப்படுகிறது. இது சந்தையில் தேயி லைக்கான கேள்வியின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது.
சவால்களை முறியடிக்க எடுக்கப்பட்ட மூலோ பாய நடவடிக்கைகள்
நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் துரித தீர்மா னங்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மா னிக்கின்றன. இலங்கைத் தேயிலை சபை மற்றும் அரசாங்கம் இணைந்து முன்னெடுத்துள்ள சில முக்கிய நடவடிக்கைகளை இதன்போது சுட்டிக்காட்டலாம். வழமையான கடல் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டபோது, துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கடல் வழித்தடங்கள் ஊடாக ஏற்றுமதிப் பணிகளைத் தேயிலை சபை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இலங்கை கொண்டுள்ள நெகிழ்வுத்தன்மையைக் காட்டு கிறது. அதேநேரம், தேயிலை உற்பத்தித் தடையின்றி இருப் பதை உறுதி செய்ய, விவசாயிகளுக்குத் தேவையான மூன்று மாத காலத்திற்கான உரத்தை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மண்ணின் செழுமையைப் பேணி, தரமான தேயிலையைப் பெறு வதற்கு இது மிக அவசியமான ஒன்றாகும். மறுபுறம் தேயிலை தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்க வும், போக்குவரத்துப் பணிகளுக்கும் எரிபொருள் இன்றிய மையாதது.
தொழிற்சாலைகளுக்குத் தடையின்றி எரிபொ ருள் கிடைப்பதை உறுதி செய்ய விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. இதேவேளை, இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யாவில் தடை விதிக்கப் பட்டமை தொடர்பில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக இலங்கையின் தொழில்நுட்ப ஆய்வு குழு வொன்று ரஷ்யா சென்றுள்ளது.
ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம் பெற்ற இந்த சந்திப்பில், இலங் கையின் தேயிலைக்கு தடைவிதிக்கப்பட்டமை குறித்து விரிவாக கலந்துரையாடப் பட்டுள்ளதுடன், அது குறித்த விசேட தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையின் தேயிலையை சீனாவில் சந்தைப்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “சிலோன் டீ” என்ற பிரசித்திப்பெற்ற இலங்கைத் தேயிலையின் வர்த்தக நாமத்துடனேயே அதனைத் சந்தைப்படுத்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுதொடர்பாக இலங்கை தேயிலை சபைக்கும் சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தின் உண்மையான நாயகர்கள்
இலங்கைத் தேயிலையின் வெற்றியைக் குறித்துப் பேசும்போது, அதன் பின்னால் இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட முடியாது. அதிகா லைப் பனியில், கரடுமுரடான மலைச்சரிவுகளில் நின்று அவர்கள் பறிக்கும் “இரு இலைகளும் ஒரு மொட்டும்” தான் இன்று இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துள்ளன. சந்தை வாய்ப்புகள் விரிவடையும் போது, அதன் நன்மைகள் அடிமட்டத் தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும்.
தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துவது அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும். தேயிலை விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் போது, தொழிலாளர்களின் ஊதியத்திலும் நியாயமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். பாரம்பரிய முறைகளுடன் நவீன தொழில்நுட்பங்களையும் புகுத்துவதன் மூலம் அவர்களின் வேலையை இலகுபடுத்த முடியும். இதேவேளை, இலங்கைத் தேயிலைக்கு உலக சந்தையில் இருக்கும் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் எதற்கும் ஈடாகாது.
எனினும், போட்டி மிகுந்த சர்வதேச சந்தையில் (கென்யா, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகள்) எமது இடத்தை தக்கவைக்க சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அதிக கேள்வி நிலவும் போது தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இலங்கையின் தரச் சான்றிதழை உலகத்தரம் வாய்ந்ததாகப் பேண வேண்டும். மத்திய கிழக்கு நெருக்கடி தற்காலிகமானது. ஆனால், தேயிலைத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு நீண்டகாலத் திட்டமிடல் அவசியம்.
மத்திய கிழக்கைத் தாண்டி ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க சந்தைகளை ஆழமாக அணுகுதலும் முக்கியமானதாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தல் வேண்டும். இலங்கைத் தேயிலைத் துறை இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் உள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேயிலை சபை எடுத்துள்ள துரித நடவடிக் கைகள் மற்றும் விவசாயிகளின் கடும் உழைப்பு என்பன இலங்கையின் பொருளாதார மீட்புக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.
எமது நாட்டின் “கருப்புத் தங்கம்” எனப்படும் தேயிலை, வெறும் ஒரு வர்த்தகப் பொருள் மட்டுமல்ல. அது பல இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் இலங்கையின் அடையாளமாகும். தேயிலை தொழிலாளர் களை பாதுகாத்து, தொழிலாளர்களைக் கௌரவித்து, நவீன சந்தைப்படுத்தல் யுக்திகளைக் கையாண்டால், சர்வதேச சந்தையில் “சிலோன் டீ” என்றென்றும் முதலிடத்திலிருக்கும் என்பதில் ஐயமில்லை.



