“சிங்கள கட்சிகளை விட தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன” : சாணக்கியன்

ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளது.
பிரிவினையை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே, சில சுயநலவாதிகள் தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை எனக் கூறி தங்களை, பிரிந்திருக்கும் இனமாக காட்ட முயல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பலர் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.  ஒரு அரசியலமைப்பின் ஊடாக, அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தினை பாதுகாக்க முடியும்.

இல்லாவிட்டால் காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தே தடுக்கவேண்டிய நிலை இருக்கிறது என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தினால் பலமடையும் போதே இளைஞர்களை இங்கு தக்கவைக்கமுடியும். இன்று இந்த நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழ்நிலை இல்லை.

மாகாண சபை தேர்தலை, தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கிய காரணம், மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கீழ் மாகாண சபை இருக்கும்.  உள்ளூராட்சி மன்றங்களை இயங்கவைப்பதற்கு ஆளுநரோ மாகாண சபையோ தடையாக இருக்காது. அதற்காகவே மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு கோருகின்றோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.