விமர்சனத்திற்கு உள்ளான அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது என்று நெதர்லாந்தின் டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ எச்சரித்துள்ளார்.
இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது என்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து ஒடுக்குமுறைச்சட்டங்களையும் நீக்குவதாகவும், நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்தது.

இருப்பினும் அரசாங்கம் அவ்வாக்குறுதியைத் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இலங்கையில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டமானது சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தவறாகப் பிரயோகிக்கப்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது.
2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் தேவைப்பாட்டை உணர்த்தின.

இத்தகைய பின்னணியில் முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்களும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்ட போதிலும், அவை எவற்றாலும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பை சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் கொண்டு வரமுடியவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் 2024இல் தேர்தல்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவை முன்மொழிவதற்குமென ஒரு குழு நியமிக்கப்பட்டது.

அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
போருக்குப் பின்னரான சவால்கள், பயங்கரவாதத் தடைச்சட்டம் மீதான நீண்டகால விமர்சனங்கள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இலங்கையின் அரசியல் கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இச்சட்டவரைவு பெரும்பாலும் முன்னைய அரசாங்கங்களின் முன்மொழிவுகளையே பிரதிபலிக்கிறது என்று நெதர்லாந்தின் டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ தமது ஆய்வறிக்கையில் கூறியுள்ளார்.