மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அது எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் வழக்கின் சான்றுகளை காவல்துறையினர் மன்றில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, ஊர்காவற்துறை காவல்துறையினரால் குறித்த புதைகுழியின் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



