தந்தைசெல்வாவின் இலக்கு ஒன்றுதான் அது இனத்தின் விடுதலை: பா.அரியநேத்திரன்

தந்தை செல்வாஎன அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898,மார்ச்,31.ல் பிறந்து 1977,ஏப்ரல்,26,ல் இயற்கை அடைந்தார். அன்னாரின் 128, வது ஜனன தினம் எதிர்வரும் 2026,மார்ச்,31,ம் நாளாகும்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்குரார்ப் பணம் 1949,டிசம்பர்,18,ம் திகதி மு.ப.9.30, மணிக்கு கொழும்பு மருதானை அரசாங்க லிகிதர் சேவை சங்கக் கட்டிட அறையில் தந்தை செல்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் “இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி” தோற்றம் பெற்றது. அந்த கூட்டத்தில் டாக்டர். இ.மு.வி.நாகநாதன், திரு.கு.வன்னியசிங்கம், டாக்டர்.எம். திருவிளங்கம்,உட்பட பலர் சமூகம் கொடுத்திருந்தனர்.
தலைவராக தந்தை செல்வா அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அன்று தமிழரசு கட்சி உருவாக்கிய அங்குராப்பணக்கூட்டத்தில்  தந்தை செல்வா ஆற்றிய தலைமை உரை “மன்னராட்சி நிலவிய காலங்களில் ஒரு நாட்டின் சரித்திரம் அந்நாட்டை ஆண்ட மன்னர்களின் வரலாறாகவே எழுதப்படும்.
மக்களாட்சி மலர்ந்த பின் மக்கள் சக்தியை திரட்டிச் செயற்பட்ட அரசியல் இயக்கங்களின் வரலாறே நாட்டின் சரித்திரமாக அமைகிறது. அக்கண்ணோட்டத்தில் அரசியல் கட்சிகளின் தோற்றம்,வளர்ச்சி,சமுதாயத்தில் அவற்றின் தாக்கம், அவற் றின் கொள்கைகளில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், சாதனைகள், ஆகியன அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.
இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஸ்தாபனமாக அமைக்க வேண்டுமென்னும் தனி நோக்கத்துடன் யாங்கள் எல்லோரும் இன்று கூடியிருக்குறோம்.                        இப்போதிருக்கும் நிலையில் யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திர தமிழரசை நிறுவுவது இன்றிய மையாதது இது எமது திடமான நம்பிக்கையாகும்”
இதுதான் தந்தை செல்வா 1949,டிசம்பர்,18,ல் ஆற்றிய முதலாவது கட்சி தலைமை உரை. இதனை உறுதிப்படுத்தி முதலாவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மாநாட்டை திரு கோணமலையில் 1951 ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் நடத்தி அம்மாநாட்டில், தமிழ் பேசும் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்றும், சிங்களவர்களுடன் சமஷ்டி அடிப்படையில் இணைந்து வாழ விரும்புவதாகவும் பிரதான தீர்மானத்தை தந்தை செல்வா நிறைவேற்றினார் சமஷ்டி கொள்கை இருந்தமையால்  சமஷ்டிக் கட்சி என்ற பெயரையும் தமிழரசுக்கட்சி பெற்றது. ஈழத்தமிழர்களுக்கான தலை நகர் ‘திருகோணமலை’ என்பதும் அந்த மாநாட்டில் உறுதி செய்யப்பட்டது.
இந்த சமஷ்டிக்கொள்கைக்காக 1949, தொடக்கம் 1976, வரையும் 27, ஆண்டுகள் அறவழிப் போராட்டங்கள், மாநாடுகள், பேச்சுக்கள், ஒப்பந்தங்கள் எல்லாம் செய்தும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 10, வது தேசிய மகாநாடு 1966, யூலை 23.24,25, ஆகிய மூன்று தினங்கள் கிழக்கு மாகாணம் கல்முனையில் டாக்டர் இ.மு.வி.நாக நாதன் தலைமையில் இடம் பெற்ற போது இறுதி நாள் (25/07/1966) அப்போது பிரதமராக இருந்த ட்ட்லி சேனநாயக்காவை பிரதம விருந்தின ராக அழைத்து மேடையில் ஏற்றி அவர் மூலமாகவேனும் அரசியல் தீர்வை பெறலாம் என தந்தை செல்வா முயன்றார்.
அந்த மகாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ட்ட்லி சேனநாயக்கா “நான் இலகுவில் வாக்கு கொடுக்கமாட்டேன் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் விட மாட்டேன்” என கூறினார் அவர் தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமையை வழங்குவேன் என்று அந்த மகாநாட்டில் வாக்கு கொடுத்தார் கூறினார் அந்த வாக்குறுதியை அவர் நிறை வேற்றவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாட் டில் இலங்கை பிரதமர் ஒருவரை அழைத்து மேடையில் உரையாற்றவைத்த மாநாடு இதுவாகும் இதற்கு முன்னமோ, இன்றுவரையோ எந்த மாநாட்டிலும் இவ்வாறு ஶ்ரீலங்கா பிரதமர் எவரும் அழைக்கப்படவில்லை. இப்படி விடுதலைக்காக பல வழிகளை 1949, டிசம்பர்,18, தொடக்கம் 1976, மே,14,வரை சமஷ்டிக்கொள்கைக்காக 27, வருடங்களாக செய்து பார்த்து உழைத்த தந்தை செல்வா ஏமாற்றம் அடைந்து இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியையும், அதன் பிரதான
சமஷ்டிக்கொள்கையையும் அப்படியே (கைவிட்டு) மௌனிக்க விட்டு விட்டு  1972, மே,04, ல்  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், கணபதி காங்கேஜர் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சி,எஷ்.ஜே.வி.செல்வநாயகம்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சௌ மியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் ஆரம்பித்த “தமிழர் கூட்டணி” என்ற கட்சியின் பெயரை மாற்றி 1976,மே,14,ல் “தமிழர் விடுதலைக்கூட்டணி”என புதிய பெயரை சூட்டி அந்த கட்சி மூலமாகவே வட்டுக்கோட்டை தீர்மானமாக  “சுதந்திர தமிழீமே ஒரே தீர்வு” என தந்தை செல்வா நிறைவேற்றினார்.
தந்தை செல்வா 1976, மே,14, ல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுப்பதற்கு சரியாக 09, நாட்களுக்கு முன்பு 1976, மே,05, ல் “தமிழீழ விடுதலைப்புலிகள்” இயக்கத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் பிரபாகரன் ஆரம்பித்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய தந்தை செல்வா சரியாக 11, மாதம் 12, நாட்களால் 1977,ஏப்ரல்,26,ல் இறைபதம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்து சரியாக 02, மாதம்,25, நாட்களால் 1977, யூலை,21, ல் நடைபெற்ற தொகுதிவாரியான இறுதித்தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 23, தொகுதிகளில் முன் வைத்து பிரசாரம் மேற்கொண்டு  “தமிழீழம் வேண்டுமானால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்ற கொஷத்துடன் அந்த தேர்தல் இடம்பெற்றது அதில் 18, தொகுதிகளில் தமிழ் மக்கள் தமிழீழத்துக்காக ஆணை வழங்கியிருந்தனர்.
வடகிழக்கில் முஷ்லிம் மக்கள் அன்றே தமிழீழத்து க்கு ஆணைவழங்கவில்லை என்பதே வரலாறு. தமிழர் விடுதலைக்கூட்டணியால் முஷ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய கல்முனை-ஏ.எம்.சம்சுதீன், சம்மாந்துறை-எச்.எல்.எம்.ஹாசீம், மூதூர்-எஷ் .எம்.மக்கீன். ஆகிய மூன்று தொகுதி களிலும் படுதோல்வி அடைந்து எந்த ஒரு முஷ்லிம் வேட் பாளரும் வெற்றிபெறவில்லை அதேபோல் கல்குடா தமிழ் முஷ்லிம் மக்கள் வாழும் தொகுதியும் படுதோல்வி கண்டது.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு அப்போதே முஷ்லிம் மக்கள் ஆணைவழங்கவில்லை என்ற கசப்பான உண் மையை புரியவேண்டும். இதற்கும் காரணம் 1977, தமிழர் விடுதலைக்கூட்டணி விட்ட தவறு என்பதே உண்மை. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் முஷ்லிம் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்ய செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலும், காசி ஆனந்தனை இலங்கை தமிழ் அரசுக்கட்சி வீட்டுச் சின்னத்திலும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமை வேட்பாளர்களாக இரண்டு தமிழர்களை போட்டியிட வைத்தமையால் முஷ்லிம்மக்கள் தமிழர் விடுதலை கூட்டணி மீது கொண்ட அதிருப்தியால் கல்முனை, சம்மாந்துறை, மூதூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானம் தோல்வியடைந்தது என்பதே உண்மை.
மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் செல்லையா இராசதுரையை பழிவாங்க அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எடுத்த முயற்சியின் விளைவே இதுவாகும். தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் எடுத்த தீர்மா னத்துக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தந்தை செல்வா அறியும் முன்னே அவர் கண்மூடினார்.
தந்தை செல்வா என்ற ஒரு பெரும் தலைவர் ஈழத்தமிழர்களுக்காக இரண்டு கட்சிகள் மூலம் இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தார்.
1. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிமூலமாக 1949, டிசம்பர்,18, ல் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு.
2. தமிழர் விடுதலைக்கூட்டணி மூலமாக 1976, மே,14, ல் சுமந்திரதமிழீழம்.
இந்த இரண்டு தீர்மானத்துக்கும் சொந்தக்காறர் தந்தை செல்வா ஆனால் இரண்டு தீர்மானமும் இரண்டுகட்சிகளால் எடுக்கப்பட்டது. இதைத்தான் நாம் பார்க்கவேண்டும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கொள்கை எது என்ரால் அது சமஷ்டிக்கொள்கை என்பது சரி,தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கை எது என்ரால் தமிழீழதனியரசு இதுதான் இரண்டு கட்சி ரீதியான கொள்கை என்பதை புரிதல் வேண்டும்.
ஆனால் தந்தை செல்வாவின் கொள்கை எது. ? இந்த கேள்விக்கான பதில் தந்தை செல்வா இறப்பதற்கு 02,மாதங்கள்,25, நாட்களுக்கு முன்னம் வட்டுக்கோட்டையில் எடுத்த இறுதித்தீர்மானமான சுதந்திர தமிழீழமே தந்தை செல்வாவின் கொள்கையாகும் சமஷ்டிக்கொள்கையை தந்தை செல்வா 1976, மே,14,ல் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை.
சிலர் கூறுவது தந்தை செல்வா சாகும் போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என கூறியே இறந்தார் என இதுவும் தவறு அவர் சாவடைவதற்கு ஆறுவருடங்களுக்கு முன்னமே 1972இல் புதிய இலங்கை குடியரசு அரசியல் யாப்பினை நிராகரித்து நாடாளுமன்றப் பதவியை  துறந்தார்  அந்த காலத்தில்தான் தந்தை செல்வா தமிழரகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
தந்தை செல்வா சாகும் போது இறுதியாக கூறியது வட்டுக்கோட்டை தீர்மானமான “சுதந்திர தமிழீழமே இறுதித்தீர்வு” என்பதையே தந்தை செல்வா பகிரங்கமாக கூறி இறந்தார் என்பதே வரலாற்று உண்மை.
வரலாறுகளை சிலர் தவறாக மாற்றி தந்தை செல்வா சாகும்போது தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இறந்தார் என்பது முற்றிலும் பொய்யான கருத்தாகும். எனவே தந்தை செல்வாவானாலும், தலைவர் பிரபாகரன் ஆனாலும் இரண்டு தலைவர்களினதும் இலக்கு ஒன்றுதான் அது இனத்தின்விடுதலை மட்டுமே என்பதே உண்மை.