தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பொதுவான கொள்கைகளை வகுக்கவும், தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகியன இணைந்து 9 உறுப்பினர்களைக் கொண்ட விசேட இணைக்குழு ஒன்றை நியமித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்டச் சந்திப்பின் போதே இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த இணைக்குழுவில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் இரட்ணலிங்கம் ஆகியோர் செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் ‘பிரஜாசக்தி’ எனும் மாற்று முறையை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரு தரப்பினரும், தேர்தலை விரைவாக நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
மேலும், சமகால உள்நாட்டு மற்றும் பூகோள அரசியல் சூழல்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.



