ஆட்பதிவுத் திணைக்கள கணினி அமைப்பில் கோளாறு: அடையாள அட்டைகளை வழங்க விசேட ஏற்பாடு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் அல்லது மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, கணினி கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம் இன்று திங்கட்கிழமை (30) ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதற்காகத் தேவையான ஆவணங்களுடன் வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது.

மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) முதல் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை வழக்கம் போல் இயங்கும்.

பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் ஏப்ரல் 06 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

தகவல் சரிபார்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கணினி அமைப்பு முழுமையாகச் சீர்செய்யப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.