ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில் உள்ளது” என்ற உண்மையைக் கூறியுள்ளார்.
இந்நிலையில் உலகநாடுகள் அனைத்துமே தங்கள் மக்களை எவ்வாறு இந்த அனைத்துலக சட்டங்கள் ஒழுங்குகள் முறைமைகள் வழக்குகள் செயலிழந்துள்ள சமகாலத்தில் பாதுகாப்பது என்ற இடர்முகாமைத்துவத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை இறைமையுள்ள உலகின் மூத்த குடிகளில் ஒருவராக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் 22.05. 1972 முதல் அரசற்ற தேசஇனமாக வாழ்கின்ற சூழலில் இன்றைய போரின் விளிம்பில் வாழும் வாழ்வை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது அவர்களின் உலகளாவிய இனமாக அனைத்துலகிலும் புலம் பதிந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் பொறுப்பாகவுள்ளது என்பதை இலக்கு புலம்பதிந்து வாழும் உலக இனமான ஈழத்தமிழர்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறது.
அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் 48 மணி நேரத்துள் திறக்காது விட்டால் அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அனைத்தையும் தாக்கியழிக்கும் என முதலில் அறிவித்தார். பின்னர் தாக்கியழிப்பதற்கு மேலும் ஐந்து நாள் அவகாசம் கொடுத்தார். தற்போது மேலும் பத்துநாள் அவகாசம் வழங்குகிறேனென காலநீடிப்புச் செய்துள்ளார். இது நேரடியாக இராணுவத்தினரை தரைவழிப்போரில் பரசூட் தரையிறக்கத்தின் மூலம் ஈடுபடவைத்துப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் தனக்குள்ள இராணுவத்தளங்களுக்கு ஆட்சேர்ப்பு மூலம் அளவிலான தரைவழிப்போரினைத் தொடர்வதற்கான காலஅவகாசத்தை ட்ரம்ப் கட்டமைத்து வருகின்றார் என்றே ஈரான் கருதுகிறது. இதனை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் ஈரானின் இரண்டு உருக்கு ஆலைகள் உள்ள நகரங்களையும் யுரேனியம் துகள்கள் உருவாக்கப்படும் மின்னணுவாலையுள்ள இடத்தினையும் அமெரிக்கா வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமையன்று தாக்கியுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே வேளை ஈரானும் ரஸ்யா மற்றும் சீனாவுடனான Axis of Evasion என ஆங்கிலத்தில் சுட்டப்படும் ஏய்ப்புச் சுழற்சி கூட்டணி மூலம் ஈரானின் ஷாகெட் வகை ட்ரோன்கள் ரஸ்யாவால் உக்ரேன் போரில் பயன்படுத்தப்படுவதால் ரஸ்யாவுக்குள் ஈரானின் தொழில்நுட்பத்தில் ட்ரோன்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் உண்டு என்பதாலும் சீனாவே ஈரானுடைய ஏவுகணைகளுக்கான திட எரிபொருள்கள் மற்றும் வெடிமருந்துத் தயாரிப்புக்கான வேதியல் பொருட்களை வழங்கி வருவதாகவும் மற்றும் சீனாவின் பேடொ (BeiDou) ஆழமாக ஊடுருவி வேவுபார்க்கும் செயற்கைக் கோள்களே ஈரானின் ஏவுகணைகள் அவற்றின் இலக்கை எட்ட வழிகாட்டுவதாகவும் கூடவே கார்பியா 3 (Garpiya 3) நீண்ட தூர ட்ரோன்களை தயாரிக்க சீன நிபுணர்கள் உதவுவதாகவும் ஆய்வுகள் வெளிவருவது ஈரான் தனியாகப் போரில் ஈடுபடவில்லை என்கின்ற உண்மையை உலகிற்கு உணர்த்துகின்றது.
உக்ரேன் அரசத்தலைவர் ஜெலன்ஸ்கி திடீரென நேரடியாகவே சவூதி அரேபியாவுக்குச் சென்று உக்ரேன் படை நிபுணர்கள் ரஸ்ய ட்ரோன்களை இடைமறித்தழிக்க கையாளும் செயற்கை நுண்ணறிவு முறைமை அமைப்பினை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வழங்கி அவர்களிடம் இருந்து, அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ளதால் பெறக்கடினமாகும் ஏவுகணைகளைப் பெறுவதற்கான பாதுகாப்பு உடன்படிக்கைகளை உருவாக்க முனைந்துள்ளார். அத்துடன் அமெரிக்காவும் தரைவழிப்போருக்கு ஆயத்தமாக மேலும் 10000 படையினரை மத்திய கிழக்கில் குவிக்கிறது. இவையெல்லாம்; இந்தப் போர்கள் தொடர்கதையாக நீளும் அபாயம் உள்ளதென உலகப் போரியல் ஆய்வுகள் கருதுவதால் பெற்றோல் டீசல் போன்ற நாளாந்தப் பயன்பாட்டுக்கான எரிபொருள்களும் இயற்கை எரிவாயுவும் உச்சவிலையினை நோக்கி நாள்தோறும் நகர்கின்றன. எல்லாவிதமான போக்குவரத்து முறைமைகளும் முடங்குவதற்கான நிலை வேகம் பெறுவதால் எல்லாச் சந்தை வழங்கல்களும் செயலிழப்பதால் உலகநாடுகள் எங்கும் பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சிகளும் வேலையின்மையும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லப் போகின்றன.
இந்நிலை இந்தியாவில் எரிபொருள் வழங்கல் பிரச்சினையாகி இந்தியாவின் நாளாந்த வாழ்வையே முடக்கக் கூடிய நிலை ஏற்பட்ட வேகத்திலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் நுண்மையான வெளிவிகாரத் திறனால் ஹேர்முஸ் தடைதாண்டி இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் வந்தடைந்ததினால் நிலைமை வழமைக்கு ஒரளவேனும் பேணப்பட்டதுமல்லாமல் சிறிலங்காவுக்கு 38000 மெட்ரிக் தொன் எரிசக்தியினை 20000 மெட்ரிக் தொன் டீசலும் 18000 மெட்ரிக்தொன் பெற்றோலும் உள்ளடங்கலாக கப்பல் வழி அனுப்பி முன்னர் “வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியது போலவே இப்பொழுதும் இந்த “எரிபொருள் நெருக்கடியில் இருந்து காப்பாற்றியுள்ளது. கூடவே ரஸ்ய வலுச்சத்தி பதில் அமைச்சர் றோமன் மார்~ அவரது தூதுக்குழுவுடன் இரண்டு நாட்களுக்கு இலங்கைக்கு நேரடியாகவே வருகை புரிந்து ரஸ்யாவிடம் இருந்து அரசாங்கம் – அரசாங்கம் என்ற முறைமையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வலுசக்தி வழங்கலையும் வலுசக்திப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சிறிலங்காவின் நண்பனாக ரஸ்யாவை முன்னிறுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா இலங்கைக்கு வருகை புரிந்து 200 மில்லியன் அவசர கடனுதவியை வழங்கியுள்ளார்.
இவ்வாறு உலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் உலக நாடுகளும் சிறிலங்காவுக்கு இலங்கைத் தீவின் அரசாங்கம் என்ற முறையில் தமது தமது தேவைக்கேற்ப அணுவுதற்கு உதவிகளை மேற்கொள்ளுவார்கள். இந்நிலையில் அரசற்ற தேச இனமான ஈழத்தமிழரின் இறைமையையும் தேசியத்தையம் ஒடுக்குவதையே, பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் 04.02.1948 இல் உருவாக்கிய ஈழத்தமிழரின் இறைமையை சிங்களவர்களின் இறைமையுடன் ஈழத்தமிழர்களின் விருப்பின்றி தன்னிச்சையாக சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் இணைத்தது முதலாகக் கடந்த 78 ஆண்டுகளாக தனது அரசியல் கொள்கையாகக் கோட்பாடாகக் கொண்டு ஈழத்தமிழின அழிப்பைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சி மூலம் வெளிப்படுத்தி வரும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி அரசாங்கங்களின் தொடர்ச்சியாக இன்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இன்றைய உலகச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வேகப்படுத்த முயலாவிட்டால் அவர்கள் ஆட்சியை பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தொடர இயலாது என்பதால் ஈழத்தமிழர்களின் இருப்பினைப் பேணுவதற்கான செயற்திட்டங்களை முன்வைக்க இயலாதவர்களாகவே ஆட்சியைத் தொடர்வர் என்பதால் ஈழத்தமிழரின் இருப்பு ஆபத்தை எதிர்நோக்கப் போகிறது என்பதையே இலக்கின் கவலையாக அனைத்துலகிலும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் முன் இவ்வாரத்தில் முன்வைக்க விரும்புகிறது.
இந்நிலையில் இப்போர்க்காலம் உருவாக்கக் கூடிய ஈழத்தமிழரின் மனிதாயத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய இடர் முகாமைத்துவத் திட்டமிடலை அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் உடன் தயாரிக்க வேண்டும். இந்தச் செயற்திட்டங்கள் ஈழத்தமிழரின் சமுகநீதியையும் சமவாய்ப்புகளையும் இந்தப் போர்க்காலத்தில் நிலைப்படுத்துவதற்குரிய முறையில் அமைக்கப்பட வேண்டும். இச்செயற்திட்டங்களை ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகத்தில் நடைமுறைப்படுத்தவதைச் சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளரான தேசிய மக்கள் சக்தி தடை செய்யாதவாறு இந்த ஈழத்தமிழர் இருப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பே அவர்கள் கூறும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறும் உண்மையான “மாற்றத்தையும்” இலங்கைத் தீவின் அரசியலில் கொண்டு வந்து இலங்கைத் தீவில் வாழும் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையக மக்கள் மற்றும் சிறு சமுதாயங்கள் அனைவருக்கும் சட்டத்தின் முன் சமத்துவ வாழ்வையும் கூட்டான பொருளாதார வளரச்சிகளையும் நடைமுறையாக்க உதவும் “அரசியல் உளவியலை” வளர்த்து மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவருக்கு ஒருவர் உதவக்கூடிய பகிர்வுகளை மக்கள் மேற்கொள்வதற்கான சமுக உறவுகளை வளர்க்கும் என்பதை தெளிவாக்கக் கூடிய அணுகுமுறைகளை செயற்திட்டங்களில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு கட்டமைத்து அதற்கான மதியும் நிதியும் தொடர்வதற்கான முறைமைகளும் தெளிவாக்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




