“இலங்கைத் தமிழர்களுக்கு சமஷ்டியே தீர்வு”: சாணக்கியன் தெரிவிப்பு

இலங்கைத் தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற சமஷ்டி முறையிலான அதிகாரப் பங்கீடே ஒரே வழி என்பதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் சந்தித்த அவர், சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

இதன்போது பல இன, மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை கொண்ட இலங்கையில், அதிகாரங்கள் அடிமட்டம் வரை பகிரப்பட வேண்டும் எனவும் அதற்கு கனடாவில் பின்பற்றப்படும் சமஷ்டி முறையிலான ஆட்சி அமைப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புகள் மற்றும் வடக்கு – கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல் ஆகியன இன்னும் பாரிய சவால்களாக இருப்பதையும் சாணக்கியன் எடுத்துரைத்தார்.

அதேநேரம், போருக்குப் பிந்தைய மீளெழுச்சி முழுமையடையாத நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலீட்டுப் பற்றாக்குறை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் போதாது எனவும் அதனுடன் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால் மட்டுமே இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.