இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சட்டச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலம் (PSTA) குறித்து விளக்கு வதற்காக, “தாயகக் களம்” நிகழ்ச்சியில் சட்டவாளர் பெனிஸ்லஸ் துசான் அவர்கள் இணைந்துள்ளார்.
நீண்டகாலமாக ஒடுக்குமுறைக்குக் காரணமாக இருந்த பழையபயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாக கொண்டுவரப்படும் இந்தச் சட்டமூலம், உண்மையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமா அல்லது மேலதிக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்குமா? என்பது குறித்து அவர் விரிவாகப்பகிர்கிறார்.
கேள்வி :
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் தற் போதுNPP அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட மூலம் (PSTA) ஆகியவற்றின் பின்னணி என்ன?
பதில் :
இலங்கையில் 1979ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் ஒரு தற்காலிக ஏற் பாடாகவேபயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால், அது கடந்த 47 ஆண்டுகளாகத் தொடர்ந்து அமுலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தகுந்த நீதி விசாரணை எதுவுமின்றி தசாப்த காலங்களாகச் சிறைகளில் வாடினர்.
தற்போதைய NPP அரசாங்கம், தாம் எதிர்க் கட்சியில் இருந்தபோதும் தேர்தல் காலங்களிலும் “அடக்கு முறைச்சட்டங்களை நீக்குவோம், குறிப்பாக PTA சட்டத்தை முற்றுமுழுதாக அகற்றுவோம்” என்று வாக்குறுதி அளித் தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைக் கடந்த நிலையிலும் அவர்கள் அச்சட்டத்தை நீக்கவில்லை. மாறாக, பழைய PTA சட்டத்தை விடவும் மிகவும் கோரமான, சிவில் மற்றும் மனித உரிமைகளை முற்றாக மீறக்கூடிய ‘அரசைப்பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும்’ (PSTA) புதிய சட்டமூலத்தை 2025 நவம்பரில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
கேள்வி :
பழைய PTA சட்டத்திற்கும் புதிய PSTA சட்ட மூலத்திற்கும் இடையிலான சட்ட ரீதியான ஒப்பீடுகள் மற்றும்அதில் மறைந்துள்ள அபாயங்கள் எவை?
பதில் :
பழைய சட்டத்தில் (PTA) நிர்வாகத் தடுப்புக்காவல் (Administrative Detention) என்பது நீதிமன்றச்செயல் முறையைத் தாண்டி ஒருவரைச் சந்தேகத்தின் அடிப் படையில் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்டது. இதில் 2022ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி 12 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க முடிந்தது. புதிய PSTA சட்டமூலத்தைதிலும் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்க முடியும் என்பதோடு, மேலதிகமாக 12 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கலாம். ஆக மொத்தம் 24 மாதங்கள் ஒருவரைத் தடுத்து வைக்க இச்சட்டம் வழிவகைசெய்கிறது.
முக்கியமான வேறுபாடுகள் பின்வருமாறு:
இராணுவமயமாக்கல்: PTA சட்டத்தில் அவசரகால நிலையில் மட்டுமே இராணுவத்தினருக்குக் கைது செய்யும் அதிகாரம் இருந்தது. ஆனால் புதிய சட்டத்தில், சாதாரண சூழலில் முப்படையினருக்கும் சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யவும், வீடுகளைச் சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இது நாட்டை எப்போதும் ஒரு அவசர கால நிலையில் வைத் திருப்பதற்குச் சமமாகும்.
பரந்துபட்ட வரைவிலக்கணம்: சர்வதேச மனித உரிமை நியமங்களின்படி (ICCPR), ஒரு குற்றத்திற்கான வரைவிலக்கணம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் இச்சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு 13 வகையான மிக விரிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது அல்லது அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துச் சொல்வது கூடப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடு: காவல்துறையினர் எவருடைய வங்கி விபரங்களையும் கோரலாம், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கலாம் மற்றும் மின்னணுச் சாதனங்களைப் பறிமுதல் செய்யலாம்.
கேள்வி :
தொழில்முறை இரகசியங்களைப் பாதுகாக்கும் உரிமை மற்றும் சித்ரவதைகளுக்கு எதிரான பாதுகாப்பு இச்சட்டத்தில் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
பதில் :
இச்சட்டத்தில் ‘தகவல் வெளிப்படுத்தும் கடமை’ (Responsibility to Disclose) என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சட்டத்தரணி, ஊடகவியலாளர் அல்லது மருத்துவர் தமது தொழில் தர்மத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர் அல்லது நோயாளியிடமிருந்து பெறும் இரகசியத் தகவல்களை காவல்துறையினர் தெரிவிக்கத் தவறினால், அவர்களும் பயங்கரவாதத்திற்குத் துணை நின்றதாகக் கருதப்படலாம். இது கருத்துச் சுதந்திரத்தையும் தொழில்முறை சுதந்திரத்தையும் முழுமையாக முடக்கும் செயலாகும்.
மேலும், இராணுவத்தினர் ஒருவரைக் கைது செய்தால் 48 மணி நேரம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த நேரத்தில் சித்திரவதைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீதிமன்றக் கண்காணிப்பு என்பது இச்சட்டத்தில் மிகவும் மட்டுப் படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகிறது. ஒரு நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டாலும், தடுப்புக்காவல் உத்தரவு (Detention Order) இருந்தால் நீதிவானால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.
கேள்வி :
அரசியல் ரீதியாக இச்சட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? குறிப்பாகத் தென்னிலங்கை மற்றும் வடகிழக்கு மக்களின் நிலைப்பாடு என்ன?
பதில் :
இச்சட்டம் உண்மையில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் கருவியாகும். ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு அமைப் பையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று தடை செய்ய முடியும். அவ்வாறு தடை செய்யப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் இச்சட்டம் இடமளிக்கவில்லை.
தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றன. ஆனால், அவர்கள் முன்பு ஆட்சியில் இருந்த போது PTA சட்டத்தை மிக மோசமாகப் பயன்படுத்தியவர்களே. தற்போதைய அரசியல் சூழலில் தமது பாது காப்பிற்காக அவர்கள் இச்சட்டத்தை எதிர்க்கக் கூடும். வடகிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் இதற்கு எதிராகப் பல விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சர்வதேச அளவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) இச் சட்டம் குறித்து ஜனாதிபதிக்கு 20 பக்கங்கள் கொண்ட விரி வான கண்டனக் கடிதத்தை அனுப்பியுள்ளது.



