சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சர்வதேச கப்பல் விவகாரம் மற்றும் வெளிநாட்டுத் தளபதிகளுக்கான அழைப்புகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெளிவுபடுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை ஒருபோதும் தனது நடுநிலைத் தன்மையிலிருந்து விலகாது என உறுதிபடத் தெரிவித்தார்.
இலங்கை சர்வதேச மட்டத்தில் ஒரு மத்தியஸ்த நாடாகவே தொடர்ந்து செயற்படும். தற்போதைய உலக அரசியல் சூழலில் அந்த நடுநிலைமையைப் பாதுகாப்பதற்கான அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அண்மையில் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை நிகழ்வின் போது, இலங்கை கடற்படைத் தளபதி ஏனைய நாட்டுத் தளபதிகளுக்கு விடுத்த அழைப்பு குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், சர்வதேச விழாக்களில் இது போன்ற சுமுகமான மற்றும் வழமையான இராஜதந்திர நடைமுறைகள் இடம்பெறுவது இயல்பானது என குறிப்பிட்டார்.
குறித்த விவகாரத்தில் அரசாங்கத்தினால் எவ்வித உத்தியோகபூர்வ அழைப்புகளும் விடுக்கப்படவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் மார்ச் 9 முதல் 13 வரையான காலப்பகுதியில் ஒரு நல்லெண்ண விஜயத்திற்காகவே அனுமதி கோரியிருந்தனர். இது குறித்த உண்மை நிலையை ஜனாதிபதியும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.
தூதரக மட்டத்திலான விமர்சனங்கள் அல்லது கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும், தேவைப்படின் வெளிவிவகார அமைச்சு அது குறித்து உரிய விளக்கத்தை அளிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



