.சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் சக்திகளை ஒரே நேர்க்கோட்டில் அணிதிரட்டி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பயணத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடகிழக்கு ஆயர் மன்றம் புதிய முயற்சியொன்றை கையில் எடுத்துள்ளது.
அண்மையில் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்விலேயே இந்த தீர்க்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய மதத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளிடையே நிலவும் பிளவுகள், மக்களின் அரசியல் அபிலாஷைகளை எட்டும் பாதையில் தடையாக இருப்பதை உணர்ந்த ஆயர் மன்றம், அவர்களை ஒருமித்த நிலைப்பாட்டிற்கு கொண்டு வர மத்தியஸ்தம் வகிக்கத் தீர்மானித்துள்ளது.
மன்றத்தின் கடந்த காலச் செயற்பாடுகள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் உட்பட யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மறைமாவட்டங்களின் குருமுதல்வர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.
யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



