ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ காண்டா, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (23) காலை நாட்டை வந்தடைந்தார்.

இலங்கை தற்போது நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் “முக்கிய கட்டத்தில்” தாம் கொழும்பு வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மசடோ கந்தா தனது எக்ஸ் தள பதிவில், இலங்கையின் தொழில் மற்றும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களால் விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியின் அடுத்த கட்ட முன்னுரிமைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள, அரசாங்க பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாட இந்த பயணம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் மாற்றப் பயணத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னுரிமைகளை முன்னெடுத்து செல்ல வரும் நாட்களில் தொடர்புடைய தரப்புகளுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.