ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர், உலகளாவிய ரீதியில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டில் பொரு ளாதார வங்குரோத்து அடைந்ததிலிருந்து மீண்டு வரத் தொடங்கியிருக்கும் இலங்கையை மீண்டுமொரு ‘பலவீன மான சவால் மிக்க தருணத்ததுக்குள்’ தள்ளியிருக்கிறது.
2026 பெப்ரவரி 28 அன்று அதிகாலை இலங்கையில் விடிந்தபோது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் மூலோபாய இலக்குகள் மீது நேரடி இராணுவத் தாக்குதல் நடத்தியிருந்தன. இந்தத் தாக்கு தல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுக ணைத் தளங்களை இலக்காகக் கொண்டிருந்தன.
இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் குவைத், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைச் சிதைத்ததுடன், உலகின் 20சதவீதமான எண்ணெய் விநியோகத்தைத்தினை கையாளும் ஹோர்முஸ் நீரி ணையை முடக்கியது.
இலங்கை பொருளாதார ரீதியாகவொரு தற்சார்பு நாடு அல்ல என்பதாலும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுகின்ற நாடு என்ற வகையிலும், சர்வதேச பொருளாதார மாற்றங்களின் தாக்கங்களில் இருந்து ஒருபோதும் விடுபட முடியாத நிலையில் உள்ளது.
இப்போர் தொடங்கிய உடனேயே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 7சதவீதமாக உயர்ந்து. குறிப்பாக 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதுடன், ஒரு வாரத்துக்குள் 100 டொலரை எட்டியது.
2022 உக்ரைன் போருக்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது100 டொலரைத் உயர்ந்து இதுவே முதற்தடவையாகும். இவ் வாறான நிலையில், போர் தொடங்கிய பத்தாவது நாளில் இலங்கை அரசாங்கம் எரிபொருள்களின் விலையை அதி ரடியாக உயர்த்தியது.
சாதாரண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்ரேன் 92 பெற்றோல் லிற்றர் ஒன்றுக்கு 24ரூபாவினாலும் (7.57சதவீதம்), சாதாரண டீசல் 22 ரூபாவினாலும் (7.26சதவீதம்) உயர்த்தப்பட்டுள்ளது. ஒக்ரேன் 95 பெற்றோல் 25ரூபாவினாலும், சுப்பர் டீசல் 24 ரூபாவினாலும் அதிகரிக் கப்பட்டுள்ளதுடன், மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவி னாலும்; (6.66சதவீதம்) உயர்த்தப்பட்டிருக்கிறது.
விவசாயம் மற்றும் மீன்பிடிக்கு அவசியமான மண்ணெண்ணெய் மற்றும் சாதாரண டீசல் விலை உயர்வு மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மக்களின் அரசாங்கம் எனக் கூறுகின்ற ஒரு நிர்வாகம், சாதாரண மக்களின் நிலையில் இருந்தே இதுபற்றி முடிவெடுத்திருக்க வேண்டும்.
போர் தொடங்கிய பின்னர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 27 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், 33 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் இருப்பதாக அறி வித்திருந்தார்.
ஆனால் போர் தொடங்கியதும் ஏற்பட்ட விநியோகக் குளறுபடிகளை கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் தீர்க்க அரசாங்கம் முன்வரவில்லை. ஒரு மாதத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகக் கூறிவிட்டு, 10 நாட்களுக்குள்ளேயே விலைகளை அதிகரித்திருப்பது அரசாங்கத்திற்கு மேலதிகமாக ஏழு சதவீத இலாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
ஏற்கனவே குறைந்த விலையில் கொள்வனவு செய்து சேமிக்கப்பட்ட எரிபொருளை, கூடிய விலையில் விற்பனை செய்து அரசாங்கமும் லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் போன்ற நிறுவனங்களும் பெரும் இலாபம் ஈட்டி வருகின்றன.
இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத் தரப்பில் முரண்பாடான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமைச் சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, மார்ச் 1 முதல் 9 ஆம் திகதி வரை 59,200 மெற்றிக் தொன் டீசலும் 47,500 மெறறிக் தொன் பெற்றோலும் நுகரப்பட்டதால் கையிருப்பு தீர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
ஆனால், பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே, 30 நாட்களுக்கான கையிருப்பு இருந்த போதிலும் வருங்கால கப்பல்களின் விலையேற்றத்தை சமநிலைப்படுத்தவே விலையை உயர்த்தியதாகக் கூறியுள்ளார்.
அமைச்சர் நளிந்தவின் தரவுகளின்படி பார்த்தால், தினசரி 4,000 மெற்றிக் தொன் நுகரப்படுகின்றதன் அடிப்ப டையில் மாதமொன்றுக்கான கையிருப்பு என்பது 120,000 மெற்றிக் தொன் ஆகும். அதில் 9 நாட்களில் பாதியளவு கூட தீர்ந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் மாதமொன்றுக்கு கையி ருப்பு இருப்பதாக ஜனாதிபதி கூறியது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது கையிருப்பு தீராமலேயே தீர்ந்து விட்டதாக பிறிதொரு வடிவத்தில் பொய் கூறப்பட்டிருக்க வேண்டும்.
இப்பொருளாதாரத் தாக்கம் எரிபொருளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இலங்கையின் அந்நியச் செலாவணிக்கு முதுகெலும்பாக விளங்கும் 1.5 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தொழிலாளர் வருமானம் போர்ச் சூழலால் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் தீவிரமடைந்தால் புதிய வேலைவாய்ப்புகள் நிறுத்தப்படும் மற்றும் அங்குள்ளவர்கள் அவசரமாக நாடு திரும்ப நேரிடும்.
இது இலங்கையின் வேலையின்மைப் பிரச்சி னையை அதிகரிப்பதுடன், டொலருக்கு நிகரான ரூபா யின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து மீண்டுமொரு பொரு ளாதார சரிவுக்கு வழிவகுக்கும். மேலும், சுற்றுலாத்துறையில் 60சதவீதத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் துபாய் மற்றும் டோஹா ஊடாகவே இலங்கை வருவதால், விமான சேவைகள் இரத்து மற்றும் வான்பரப்பு மூடலால் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏற்கனவே 20சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வர்த்தகத் துறையில், இலங்கையின் தேயிலையின் முக்கிய கொள்வனவாளர்களான ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான வர்த்தகம் ஈரானிய ரியால் வீழ்ச்சியாலும் வங்கிச் சிக்கல்களாலும் ஸ்தம்பித்துள்ளது.
சுயஸ் கால்வாய் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆடை மற்றும் இறப்பர் ஏற்றுமதிப் பொருட்கள் ஆப்பிரிக் காவைச் சுற்றிச்செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரம் 14 நாட்கள் வரை அதிகரித்துள்ளதுடன் கப்பல் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
இதேநேரம், பெப்ரவரி மாதத்தில் 1.6சதவீதமாகக் குறைந்திருந்த இலங்கையின் பணவீக்கம், இந்த எரி பொருள் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான அரசாங்கத்தின் ‘முறைமை மாற்றத்திற்கான’ வழங்கிய வாக்குறுதிகள் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் மோதல்களில் பரிசோதனைக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சி என்பது நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கில் ஏவுகணைகளை இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதனால் உள்நாட்டில் ஏற்படும் விலை உயர்வையும் எரிபொருள் நெருக்கடியையும் எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதைப் பொறுத்தே இலங்கை யின் எதிர்காலம் அமையவுள்ளது.
தற்போதைய சூழலில் மத்திய கிழக்கு போர் இலங்கை மீது திரைமறைவு வரிகள் அதிகரிப்புக்கும், அதிரடியான கட்டண உயர்வுகளுக்கும் அடிப்படையாகியுள் ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முடக்கும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.
அரசாங்கம் உண்மையான தரவுகளை மறைப்பதும், முரண்பாடான விளக்கங்களை அளிப்பதும் மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதோடு மட்டுமல்லாது, சுமைகளால் தத்தளிக்கும் சாதாரண மக்கள் மீது, மேலும் சுமைகளை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் இந்தியாவிடத்தில் மேலதிக எரிபொருளை விநியோகிக் குமாறு பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு டெல்லியில் இருந்தும் சாதகமான சமிக்ஞை வெளியாகியுள்ளது.
அதேபோன்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை அழைத்து கொள்வனவுக்காக ரஷ்யாவிலிருந்து எரிபொரு ளைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைவிடவும், ஏப்ரல் இறுதி வரையிலான தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்துக்காக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து எரிபொருட் களை கொள்வனவு செய்யப்போவதாக இலங்கை பெற் றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருக்கிறது.
இந்த நிலைமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கை யிலேயே நாட்டில் நான்கில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான உபாலி பன்னிலகேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார். இவ்வாறான நிலையில் அமெரிக்க, இஸ்ரேலிய, ஈரான் யுத்தமும் மத்திய கிழக்கு வளைகுடா பதற்றமும் நீண்டகாலம் நீடிக்குமானால், இலங்கையின் பொருளாதார மீட்சி என்பது வெறும் கனவாகவே போய்விடும்.



