இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்காவின் ஆயுதம்!

கடந்த மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை இலங்கைக்கு அருகில் வைத்துப் ‘டோர்பிடோ’ எனும் நீர்மூழ்கிக் குண்டு மூலம் அமெரிக்கா மூழ்கடித்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நீர்மூழ்கிக் குண்டு மூலம் ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என அமெரிக்கா கூறுகிறது.

நீர்மூழ்கி கப்பல்களின் முதன்மை ஆயுதமாக கருதப்படும் ‘மார்க்-48 டோர்பிடோ’ எனும் இந்த குண்டு, அமெரிக்க கடற்படையின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.

சுமார் 1,700 கிலோ எடை கொண்ட இந்த ஆயுதம் எதிரி நாட்டின் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டையும் அழிக்கும் திறன் உடையது.

மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் சுமார் 180 பேர் பயணித்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்ட உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவால் அழிக்கப்பட்ட IRIS டேனா கப்பல், ஈரானிய கடற்படையின் பலத்தைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65,000 கிமீ கடல் பயணத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.