கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்!

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது.

ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் மறைமுக இலக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப.சத்திலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டினர்.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் ம ற்றும் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் செய்வது எனவும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான கூட்டறிக்கையை உள்நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், தூதுவராலயங்களுக்கும் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.