மாணவர் தற்கொலையில் சென்னை ஐஐடி முதலிடம்

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலேயே, சென்னை ஐ.ஐ.டி.யில்தான் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக உள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யை சோ்ந்த 27 மாணவா்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தெரியவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

“தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் விவரங்களையும், அதற்கான காரணங்களையும், தற்கொலைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆா்டிஐ ஆா்வலா் சந்திரசேகா் கௌா் கோரியிருந்தாா். அவருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயா்கல்வித் துறை அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஐஐடி மாணவா்கள் 27 போ் தற்கொலை செய்துகொண்டனா். இந்தக் காலகட்டத்தில், சென்னை ஐஐடியில் 7 மாணவா்களும், காரக்பூா் ஐஐடியில் 5 மாணவா்களும், டெல்லி ஐஐடியில் 3 மாணவா்களும், ஹைதராபாத் ஐஐடியில் 3 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டனா்.

மும்பை ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகியவற்றில் தலா 2 மாணவா்களும், வாரணாசி ஐஐடி, தன்பாத் ஐஐடி, கான்பூா் ஐஐடி ஆகியவற்றில் தலா ஒரு மாணவரும் தற்கொலை செய்துகொண்டனா். இந்தூா், பாட்னா, ஜோத்பூா், புவனேஸ்வர், காந்திநகா், ரோபாா், மண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தாா்வாட் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடிக்களில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாணவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.