பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியினால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டது. அவ் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரங்களும், பாரதூரமான விளைவுகளும் காரணங் களாக இருந்திருக்க வேண்டும். அவையனைத்தும் எவ்வித மாறுதல்களும் இன்றி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கர வாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என்பதனையும் வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் தற்போது “பழசும் வேண்டாம், புதிசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் வடகிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப் பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிக கொடூரமானது என மனித உரிமை ஆர்வலர்கள்,சட்டத்தரணிகள், கல்வி யாளர்கள், என பலதரப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய வரை விலக்கணம் மிகவும் பரந்ததாக உள்ளதால் நபர் ஒருவர் எந்த குற்றம் செய்தாலும் அரசு அவரை கைது செய்யலாம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து ஒரு வருடத்தின் பின் வழக்கு தொடுக்க விட்டாலும் கூட அவரை பிணையில் விடுவிக்கலாம். வரவுள்ள புதிய வரைபு சட்டம் ஒருவர் ஒரு வருடம் தடுப்பாணையில் தடுத்து வைக்கப்படலாம். மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்படலாம், ஆகையால் இரண்டு வருடங்களுக்கு பின்புதான் ஒருவரை பிணையில் விடுதலை செய்யலாம் என கூறுகின்றது.
ஆனால் இந்த படுமோசமான செயலை அறிந்தும் அரசு தரப்பு அமைச்சர்கள், ஜனாதிபதி, உட்பட எவருமே அதனை இல்லாமல் செய்ய எந்த ஒரு நடவடிக்கையினையும் இதுவரை எடுக்கவில்லை. 1979 ஜூலை 19 ம் திகதி இரவு 10.45, மணிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டது.
அன்று பி.ப.1, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், நீதி அமைச்சராகவும் இருந்த K.W.தேவநாயகம் அவர்கள் இந்த சட்டத்தை சமர்ப்பித்தார். தற்காலிகசட்டமாகவே சமர்பிக்கப்பட்டாலும் பின்னர் இது தொடர்ந்து 1982ல் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஏறக்குறைய பத்து மணித்தியாலம் மட்டுமே விவாதம் இடம்பெற்று அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணி 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி 18 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். 49வருடங்களாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத் தால் மிகவும் வதைபட்டு பாதிப்படைந்தவர்கள் இலங்கை யில் தமிழர்களே. தற்போதும் இச்சட்டத்தால் பலர் கைதுசெய் யப்பட்டுள்ளனர், இன்னும் கைதுசெய்யப்படுகின்றனர்.
இந்த சட்டத்தை முற்றாக நீக்குமாறு சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ச்சியாக அழுத்தங்களை தெரிவித்தன.தமிழரை கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவே றிய பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டமாக இது அப்போது பலராலும் பேசப்பட்டது.
இந்த சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் ஜனாதி பதி ஜே.ஆர்.ஜெயவர்தனா இராணுவ தளபதியாக அப்போது இருந்த பிரிகேடியர் ஐ.விஜயதுங்காவை 1979 ஜூலை 20ம் திகதி அழைத்து எதிர்வரும் 1979 டிசம்பர் 31ம் திகதிக்கிடையில் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை வேரொடு களையுமாறு உத்தரவிட்டார்.
1977ல் வடகிழக்கில் உள்ள 18 தமிழ்தொகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணி வெற்றியீட்டி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கிய இந்த தேர்தலில் தான் முதன் முதலாக இலங்கை சரித்திரத்தில் தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவரானார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்காத ஒரேயொரு தேர்தல் தொகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியாகும். இந்த தொகுதியில் ஐக்கியதேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட K.W.தேவநாயகம் அவர்கள் வெற்றி பெற்றார். தமிழர் விடுதலை கூட்டணியை தோற்கடித்தமைக்காக அவருக்கு ஜே.ஆர்.ஜெயவர்தனா நீதி அமைச்சர் பதவியை பரிசாக வழங்கினார்.
அதே பதவியை வைத்து 1979 ஜூலை19ல் பயங்கரவாத சட்டத்தை அவரைக்கொண்டு பாராளுமன்றத் தில் நிறைவேற்றிய ஜே.ஆர்.ஜெயவர்தனா சரியாக ஏழு மாதத்தால் K.W. தேவநாயகம் அவர்களிடம் இருந்த நீதி அமைச்சர் பதவியை பறித்தெடுத்து உள்ளூராட்சி அமைச்சராக 1980 பெப்ரவரி 14 ம் திகதி வழங்கினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தமிழன்ஒருவனை நீதி அமைச்சராக ஐக்கிய தேசிய கட்சி அரசு நியமித்தது என்ற வரலாற்றும் இதில் உள்ளது.
ஏற்கனவே 1979ல் பயங்கரவாத தடைச்சட்டம் நிறை வேற்றப்பட்டு 2010 வரை மிக அதிக எண்ணிக்கையில் சித்திர வதைப்பட்டு கொலைசெய்யப்பட்டு சிறைகளில் வருடக் கணக்காக தடுத்து வைக்கப்பட்ட ஒரே இனம் என்றால்அது தமிழர்கள்தான்.
ஆனால் 2010க்கு பின்னர்தான் பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தில் கடந்த காலங்களில் ஆட்சியில் அமைச்சர்களாக, முதலமைச்சர்களாக, பிரதி அமைச்சர் களாக, அதிகாரிகளாக ஏன் ஜனாதிபதிகளாக இருந்தவர் களுக்கும் இந்த கொடிய சட்டம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிங்கள மக்களுக்கும் இந்த சட்டம் இப்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையரும் இந்த சட்டத்தை இரத்துச்செய்வதற்கு அல்லது மாற்றீடாக வேறு சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் எதிர்கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஏற்கனவே சில தடவைகள் கையெழுத்துப்போராட்டங்கள் நடத்திய வரலாறுகள் உண்டு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2022 பெப்ரவரியில் வடகிழக்கு மற்றும் கொழும்பு, மலையகம் தழுவிய ரீதியில் கையெழுத்துப்போராட்டம் நடைபெற்றது. கையெழுத்து பெறப்பட்ட படிவங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.
இதுபோல் 2025 ஜூலை மாதம் சம உரிமை இயக்கம் எனும் அமைப்பும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து போராட்டம் நடத்தியது அதனாலும் எந்த பலனும் இல்லை. இப்போது மீண்டும் கையெழுத்துப்போராட்டம் ஆரம் பமாகியுள்ளது. இதன் மூலமும் எதிர்ப்பை மட்டும் காட்டலாம். ஆனால் சட்டம் முழுமையாக நீக்கப்படுமா என்பதே சந்தேகம்.
சர்வதேசமும், ஐ.நா அமைப்பும், அனைத்துல மனித உரிமை அமைப்பும், இந்த கொடிய சட்டத்தை நீக்குமாறு அழுத்தம் கொடுத்தும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களே இலங்கையில் உள்ளனர் என்பதே வரலாறு.



