சுயாதீன வழக்குதொடுநர் அலுவலகத்துக்கான வரைவு ஏப்ரலில்…..

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன வழக்குத்தொடுநர் எனும் புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப வரைவுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கட்டமைப்பானது தற்போதுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தை கலைப்பதற்கான முயற்சி அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் தனது தற்போதைய பணிகளைத் தொடர்வார் அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்காது.

எனினும் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஒரு சுயாதீனமான நிறுவனம் உருவாக்கப்படும்.
அந்த சுயாதீன வழக்குத்தொடுநர் அரசாங்கத்தின் கொள்கைகளால் அன்றி, சாட்சியங்கள் மற்றும் சட்ட ரீதியான காரணிகளால் மட்டுமே வழிநடத்தப்படுவார் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான குழு, சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து, குறித்த கட்டமைப்புக்கான அதிகாரங்கள் தொடர்பிலான ஆய்வுகளும், ஆலோசனைகளும் நடத்தப்படுகின்றன.