மத்திய கிழக்கில் போர் விமானங்களைக் குவித்தது அமெரிக்கா!

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் – தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கட்கிழமை முதல் பிரம்மாண்ட போா்ப் பயிற்சியைத் தொடங்கியது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், கடந்த 24 மணி நேரத்தில் எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தி தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையேயான பிரச்சினையில் ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரானைச் சேர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்கள் மட்டுமின்றி, வான்வழியில் எரிபொருள் நிரப்பும் டேங்கர்களும் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. அமெரிக்க அதிகாரிகள் கூறும் தகவலின் படி, மத்திய கிழக்கில் வலிமையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே மத்திய கிழக்கு பகுதியில் ஒரு விமானம் தாங்கி போா்க்கப்பல் இருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலையும் அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்திருக்கிறது.

பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.