பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை இலங்கைக்கு பயணம்!

இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்கள் மீது பிரித்தானிய விதித்த தடைகள் குறித்து புதிய அரசாங்கம் எவ்வாறு பதிலளித்தது என்பைதை விளக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் யசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை (17) கொழும்புக்கு வருகை தரவுள்ள நிலையில் குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த விஷயம் குறித்து கருத்துரைத்த யசஸ் தர்மதாச, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy), கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட முன்னாள் இராணுவத் தலைவர்கள் மீது தடைகளை விதிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதாரமற்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை நடவடிக்கைகளுக்கு லாம்மி அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய தர்மதாச, புதிய அரசாங்கம் பிரித்தானிய நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளித்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளராக இருந்த அவர், கரன்னாகொட, சவேந்திர சில்வா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா ஆகியோர் மீது தடைகளை அறிவித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு நீதித்துறை செயலாளராகவும், துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக லாம்மி கூறினார். பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவு, கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாகவும் லாம்மி அறிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் தடைகள் குறித்து விசாரித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சர் குழுவை நியமிப்பதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்த போதிலும், அவர்களைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை என்றும் உலகளாவிய இலங்கை மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் யசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் இலங்கை வரவுள்ள பிரித்தானிய துணை பிரதமர், இலங்கையின் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும் எதிர்க்கட்சி தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.  அத்துடன் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.