13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும் என்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சுதந்திர இலங்கையில், சமஷ்டி தீர்வு பற்றி உரையாடலை பண்டாரநாயக்க ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் அந்த உரையாடல் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்ப்படைந்திருந்த நிலையில் தனி நாட்டை உருவாக்குவது பற்றியதாகவே இருந்தது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அத்துடன் வன்முறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்”.
“ஆயுதங்களை ஏந்திய தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாடு தான் இறுதியான தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அத்தகைய நிலைப்பாடுகளை உடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்” என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசைக்கு பொருத்தமானவராக இருந்தார்.
அவரால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய முழுமையான இயலுமை காணப்பட்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதுபற்றிய உரையாடல்கள் காணப்பட்டாலும் செயற்பாடுகள் இல்லை. இதற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை முழுமையாக அமுலாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு கொள்ள முடியும். அதனைவிடுத்து ஒற்றையாட்சியை நீக்குகின்றோம், முறைமையை மாற்றுகின்றோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளும் நடைமுறையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விடயமாகும்” என்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது தனது நிலைப்பாடாகும் என்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.



