தெற்கு அரசியலில் பேசுபொருளாகியுள்ள சட்டத்தரணி படுகொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சுத்தா என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

லொகு பெட்டி என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு அவர் தனது வழக்கு பற்றிய தகவல்களை வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி இதற்கு முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளில் முன்னிலையாகியுள்ளார். இருப்பினும், விசாரணைகளில் இருவருக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (12) லொகு பெட்டியின் வழக்குகளுக்காக கடுவெல நீதிமன்றத்தில் குறித்த சட்டத்தரணி முன்னிலையானார். பின்னர், தனது மனைவியுடன் திரும்பி வரும்போது, அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடம் அருகே காரில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரில் நான்கு பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 45, 42 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன், இந்த ஆண்டு இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை 07 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை குறித்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.  அத்துடன் இந்த விடயம் இலங்கையின் தெற்கு அரசியலில் முக்கிய பேசு பொருளாகவும் மாறியுள்ளது.