உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் மத்தேவ் டக்வேர்த் அவர்கள் பாத்பைண்டர் (வழி கண்டறியும்) அமைப்பினர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அவருடன் நடத்திய வட்டமேசை மாநாட்டில் இந்த மிக முக்கியமான உண்மையினை உறுதியுடன் தெரிவித்தமைக்கு இலக்கு அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகிறது. சிறிலங்கா கேட்டால் உதவ அவுஸ்திரேலியா தயாராக உள்ளதாகக் கூறிய அவஸ்திரேலியத் தூதுவர் சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்கள் அளித்துள்ள சில அறிக்கைகள் அவுஸ்திரேலியாவுக்கு மிகுந்த ஊக்கமளித்திருப்பதாகவும் கூறியிருப்பது ஈழத்தமிழர்களால் கவனமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதென்பதை இலக்கு இவ்வாரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அதாவது சிறிலங்கா அரசாங்கத்தில் தங்கள் நாடுகளுக்கான தூதுவர்களாக உள்ள எவரும் சிறிலங்கா என்ற அரசையே இலங்கைத் தீவின் ஒரே இறைமையாளராக ஏற்றுச் சிறிலங்காவினுடைய ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிகளுக்கும் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்து சிறிலங்காவைத் தெற்கு உலகில் வலிமையுள்ள அரசாக நிலைநிறுத்தும் நோக்கிலேயே செயற்படுவர் என்பது வெளிப்படையான நடைமுறை உண்மையாக உள்ளது. இவை ஈழத்தமிழர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வர முயலும் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை அது தான் நினைத்த மாதிரியே கொண்டு வரக்கூடிய ஈழத்தமிழர் தேசிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்நேரத்தில் சிறிலங்காவின் அரசியலமைப்பு அதன் மக்கள் என்று சிறிலங்காவின் குடிகள் என்ற வகையில் ஈழத்தமிழர்களை உள்ளடக்கியிருக்கும் இன்றைய நிலையையும் கூட இல்லாதொழித்து மொழிக் கூட்டத்தினர் மதக்கூட்டத்தினர் என்ற முறையில் ஈழத்தமிழரின் இறைமை நீக்கத்தையும் தேசிய நீக்கத்தையும் செய்கின்ற பொழுது இதுவரை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் அதன் குடிகள் என்ற வகையில் ஈழத்தமிழர்களுக்கு உள்ளக தன்னாட்சி உரிமையுண்டு என்றும் கூட்டாட்சி கோரப்படலாம் என்றும் அதனது தீர்ப்புக்களில் அளித்த விளக்கங்களைக் கூட இனி அளிக்க இயலாது ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்த நாட்டில் வாழும் கூட்டத்தினர் என்ற அபாயகரமான தேசிய நெருக்கடிக்குள் தள்ளப்படப் போகின்றார்கள். இதற்கு ஆதரவு அளிக்கக் கூடிய முறையில் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் 15ம் திகதி அரசியலமைப்பு ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையுடன் கூடிய கூட்டாட்சியை வலியுறுத்தி நடாத்தும் எழுச்சிப் பேரணியிலும் கலந்து கொள்ள மறுத்துள்ளனர். இந்நிலையில் இலக்கு ஈழத்தமிழர்கள் “மூலேபாய ஒற்றுமை” யுடன் ஏக்கிய இராச்சியத்தை மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்தையும் தேசிய நீக்கத்தையும் முன்னெடுக்கக் கூடிய எல்லா அறியாமைகளையும் எதிர்க்கக் கூடிய வகையில் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அனைத்துலக மாநாடுகளை நடத்துவதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டிய நேரம் இது என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இந்த மாநாடுகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கைகள் தயாரிக்கும் முறைக்கு ஏற்ப அதில் வல்லுனர்களான உலக அறிஞர்களுடன் இணைந்து செயற்பட்டு சக்தி மிக்க வகையில் அவற்றை நடத்த வேண்டுமென்பதே இலக்கின் வேண்டுகோளாக உள்ளது.
ஏனெனில் இன்றைய உலக மாற்றங்கள் இதனை சமகாலத்தின் தேவையாக்குகின்றது. இதனை உறுதி செய்யக் கூடிய முறையில் தெற்கு ஆசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளியுறவு உதவிச் செயலாளர் பால் கபூர் அவர்கள் அமெரிக்காவுக்கு முதலிடம் என்னும் அமெரிக்க அரசத்தலைவரின் சமகாலக் கொள்கையானது அமெரிக்காவுக்கு மட்டும் என்று பொருள்படாது எமது இலக்குகளை அடையச் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் குறிக்கும் என்று விளக்கம் அளித்து விட்டு இந்தியாப் பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ளார் எனப் பாராட்டியுள்ளார். கூடவே அமெரிக்கா பங்களாதேசுடன் அண்மையில் பங்களாதேசின் 175 மில்லியன் மக்களுக்கு அமெரிக்கச் சந்தையைத் திறந்து விடக்கூடிய முறையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் சுமையைச் சுமக்க ஒத்த மனத்தினருடனான அமெரிக்காவின் பங்காண்மைக்கான உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வேளையில் யேர்மனியின் முனிச்சில் நடைபெறும் உலகப் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் யேர்மனின் சான்சிலர் மேர்ஸ் அமெரிக்கா தனியாக இன்றைய உலகில் செல்வதற்கான சக்தியைக் கொண்டிருக்கவில்லையென்றும் இன்றைய உலகு முன்பு இருந்த அனைத்துலக அரசியல் ஒழுங்குமுறையை இழந்து விட்டது எனவும் இந்நிலையில் கலாச்சார போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் மனித மாண்புக்கும் அடிப்படையான சட்டங்களுக்கும் எதிரானவைகள் நடைபெறுவதால் இன்று இங்கு கருத்துச் சுதந்திரம் முடிவுக்கு வருகிறதெனவும வரிவிதிப்புக்களிலும் தற்பாதுகாப்புப் பொருளாதாரங்களிலும் நாம் நம்பிக்கை வைக்காது சுதந்திர வர்த்தகத்தையே முன்னெடுக்க வேண்டுமெனவும் காலநிலையைச் சீர்படுத்துவதிலும் உலக சுகாதாரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும், பெருவலல்லரசுக்களின் காலத்தில் எங்களின் சுதந்திரம் அல்ல அச்சுறுத்தல்களே ஏற்பட்டுள்ளன எனவும் சர்வாதிகாரம் பின்பற்றுபவர்களையே உருவாக்கும் எனவும் சனநாயகம் தான் பங்காண்மைகளையும் கூட்டாண்மைகளையும் உருவாக்கும் எனவும் நேட்டோவைத் தாங்கள் தள்ளவில்லை காலத்துக்கேற்ற பழுதுபார்த்தல்கள் தேவை எனவும் நேட்டோ ஐரோப்பாவின் தூணாக எழக்கூடிய வகையில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் உரையாற்றினார். பிரான்சிய அரசத்தலைர் மக்ரோனும் ஐரோப்பாவை உலகின் அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் இதற்குத் தடையாக உள்ளவற்றை விளக்கி அவற்றை எல்லாம் ஐரோப்பியர்கள் ஒன்றுபட்டு நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமாரதிசநாயக்காவின் அமெரிக்கப் பயணத்தின் பொழுது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த விபரங்கள் இன்றளவும் பாதுகாப்பாகவே உள்ளன. இதற்கிடை இந்தியாவுடன் சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் குறித்து சிறிலங்காவின் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் சிறிலங்கா அமைச்சருமான விமல் வீரவன்ச “ கொழும்பில் கட்சிக் காரியாலயத்தில் 12.02.2026.ல் நடாத்திய கூட்டத்தில் “இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்தில் உள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல் அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது.
இரு அரசுக்களின் ஒப்பந்தம் மூலம் கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கவும் இந்தியப் பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்மோட்டைக் கனிம வளங்களான இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உயர்தர சிலிக்கா ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தங்கள் மூலம் கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. காங்கேசன்துறைமுகம், திருகோணமலைத் துறைமுகம் என்பன இந்தியமயமாக்கப்படும். மருந்துச் சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்பல் என்பன நடைபெறக்கூடிய ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் உள்ளன. இவற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். இதே போன்ற ஒரு அழைப்பை குருணாகலில் இருந்து சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறிசேகரவும் விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பிலும் கனிம வளங்களை இந்தியர்கள் அகழ்வதற்கான வசதியை இந்த ஏழு ஒப்பந்தங்களும் செய்துள்ளன எனவும் ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவின் அனுமதியின்றி எழுத்து வடிவில் சிறிலங்காவால் வெளியிட முடியாது எனவும் தனது அழைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவைகள் எல்லாம் இன்றைய சூழலில் உலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை நீர்த்துப்போகக் கூடிய முறையிலேயே சிறிலங்கா செயற்படுவதற்கான சந்தர்ப்பங்களையே அளிக்கின்றன இந்த இடத்தில்தான் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை மீளுறுதி செய்வதற்கு மூலோபாய ஒற்றுமையினை (Strategic Unity) வெளிப்படுத்த உடன் செயலாற்ற வேண்டுமென இலக்கு இவ்வாரத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழரின் அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் நிறுவனங்களையும் இயக்கங்களையும் வேண்டி நிற்கிறது. கூடவே அனைத்துலக அரசியல்வாதிகளை நெறிப்படுத்தக் கூடிய அவர்களின் நிகழ்ச்சிகளை மற்றும் கொள்கை வகுப்புக்களைச் செய்கின்ற அனைத்துலக முகவர்கள் உடன் தொடர்பு கொண்டு உரியமுறையில் அனைத்துலக அரசியல் தளத்தைச் சந்திக்கத் தக்க வகையில் எதிர் வினைகளைச் செய்ய வேண்டும் என்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது. 13.02.2026 இல் இங்கிலாந்தில் பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் இந்த மூலேபாய ஒற்றுமையுடனான செயற்பாடு பிரித்தானியா அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என வகைப்படுத்தியதை பிரித்தானிய உயர் நீதிமன்றம் சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கவைத்துள்ளது என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
ஆசிரியர்




