ஒபாமா காலத்து உத்தரவுகளை இரத்து செய்த ட்ரம்ப்!

பூமியை வெப்பமாக்கும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒபாமா காலத்து முக்கிய அறிவியல் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

2009-ஆம் ஆண்டின் ‘ஆபத்து கண்டறிதல்’ (Endangerment Finding) என்று அழைக்கப்படும் அந்த விதிமுறைகள், பல்வேறு பசுமை இல்ல வாயுக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முடிவு செய்தது. இது உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான, (குறிப்பாக வாகனங்களில்) ஃபெடரல் அரசின் முயற்சிகளின் சட்டப்பூர்வ அடித்தளமாக மாறியுள்ளது.

இந்த இரத்து நடவடிக்கையை “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய விதிமுறைத் தளர்வு” என்று வெள்ளை மாளிகை விவரித்ததுடன், இது கார்களின் விலையைக் குறைக்கும் என்றும், வாகனத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வாகனத்திற்கு 2,400 அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,17,000 ரூபாய்) செலவைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க பின்னடைவு நடவடிக்கை இது என்று சுற்றுச்சூழல் குழுக்கள் கூறுகின்றன, மேலும் இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கவும் தயாராக உள்ளன.

வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் பேசிய  ட்ரம்ப், 2009-ஆம் ஆண்டு விதிமுறைகள், “அமெரிக்க வாகனத் தொழில்துறையை கடுமையாக சேதப்படுத்திய மற்றும் அமெரிக்க நுகர்வோருக்கான விலைகளை பெருமளவில் உயர்த்திய ஒரு பேரழிவுகரமான ஒபாமா காலக் கொள்கை” என்று கூறினார்.

“இந்தத் தீவிரமான விதி, வரலாற்றின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றான ‘கிரீன் நியூ ஸ்கேம்’ என்ற மோசடிக்கான சட்ட அடித்தளமாக மாறியது,” என்று ஜனநாயகக் கட்சியினரின் காலநிலைத் திட்டம் குறித்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்ப் கூறினார்.

பதவியில் இருக்கும் அதிபர்களின் கொள்கைகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ‘இந்த விதிமுறைகளை இரத்து செய்வது அமெரிக்கர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

“அது இல்லாமல், நமது பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திறன் ஆகியவற்றில் நாம் குறைபாடுகளை எதிர்கொள்வோம்.” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.